நூடுல்ஸ் சமைத்து, விற்று வாழ்வை நடத்தும் மாற்றுத்திறனாளி நபர்... வைரலான வீடியோ

சமூக வலைதளங்களில் மாற்றுத்திறனாளி நபர் நூடுல்ஸ் சமைத்து, விற்று வாழ்வை நடத்தும் வீடியோ ஊக்கம் தரும் வகையில் வைரலாகி வருகிறது.
நூடுல்ஸ் சமைத்து, விற்று வாழ்வை நடத்தும் மாற்றுத்திறனாளி நபர்... வைரலான வீடியோ
Published on

புதுடெல்லி,

வாழ்க்கையில் மற்றவர்களுக்கு ஊக்கம் ஏற்படும் வகையில் ராகுல் மிஷ்ரா என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் நூடுல்ஸ் தள்ளுவண்டி கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரது கைகள் முழு அளவில் வளர்ந்திராத நிலையில், மனம் தளராமல் நூடுல்ஸ் சமைத்து விற்று வருகிறார்.

35 வினாடிகள் ஓடும் வீடியோவில், ஒரு கட்டை விரல் அளவே உள்ள, இயங்க கூடிய நிலையில் உள்ள ஒரு கையை கொண்டு, நூடுல்சில் சோயா சாஸ் கலந்து அதனை கிளறி விடுகிறார். அடுப்பில் பற்ற வைத்த நெருப்புடன் வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கும் அவர், தனது உழைப்பின் வழியே வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்.

அவரது கடின உழைப்பு மற்றும் திறமை ஆகியவை, நாமெல்லோரும் எப்படி உழைத்து வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த வீடியோவை ராகுல் மிஷ்ரா என்பவர் டுவிட்டரில் வெளியிட்டு, இதனை ரீ-டுவிட் செய்வதற்கு ஒரு பைசா கூட செலவாகாது என தெரிவித்து உள்ளார். மனம் உடைந்து போனது போன்ற எமோஜியையும் பதிவிட்டு உள்ளார். இதனை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கில் லைக்குகளும் குவிந்துள்ளன.

ஒரு சிலர், தள்ளுவண்டி கடைக்காரரின் இருப்பிடம் பற்றிய விவரங்களை தெரிவிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர். குறைந்தது, அவருடைய இருப்பிடத்திற்கு அருகே இருப்பவர்கள் அவரது விற்பனை பொருட்களை வாங்கி அவரது தொழிலுக்கு துணை நிற்பதற்காக இதனை வேண்டுகோளாக பதிவிட்டு உள்ளனர்.

ஏதேனும் சாதிக்க வேண்டும் என நாம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும்போது, முடியாதது என்று உலகில் எதுவுமில்லை என்று ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.

எப்போதும் வலிமையான மனம் படைத்தவர்களில் இவரும் ஒருவர். மற்ற எவற்றையும் விட அதிக மரியாதைக்குரியவர் என்று மற்றொருவர் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொருவருக்கும் ஊக்கம் ஏற்படுத்துகிறார். அவரது அர்ப்பணிப்புக்கு எனது வணக்கங்கள் என்றும் வாழ்வின் வலிமை, ஒருபோதும் மனம் தளரகூடாது என்ற உறுதியான நோக்கம்... எல்லையற்ற வகையில் ஊக்கம் அளிக்கும் உற்பத்தி மூலம் என்றும் சிலர் குறிப்பிட்டு உள்ளனர்.

இதுபோன்ற விசயங்களை காணும்போது, நமது வாழ்வில் நாம் மேற்கொள்ளும் நமது சொந்த அணுகுமுறைகளை உண்மையில் மீண்டும் சுயமதிப்பீடு செய்து கொள்ள வைக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com