மனித இனத்தின் மகத்தான சாதனை... பூமியில் இருந்து ‘ஒரு ஒளி நாள்’ தூரத்தை கடக்கப்போகும் ‘வாயேஜர்-1’

‘வாயேஜர்-1’ விண்கலம் 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணம் செய்து வருகிறது.
மனித இனத்தின் மகத்தான சாதனை... பூமியில் இருந்து ‘ஒரு ஒளி நாள்’ தூரத்தை கடக்கப்போகும் ‘வாயேஜர்-1’
Published on: 

வாஷிங்டன்,

மனித வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கும்போது, மனிதர்களுக்கு எப்போதுமே வானம், நட்சத்திரங்கள், விண்வெளி, பிரபஞ்சம் பற்றி ஆர்வமும், கேள்விகளும் இருந்து கொண்டேதான் இருந்தது என்பது நமக்கு தெரியவருகிறது. பண்டைய கிரேக்க, எகிப்திய, சீன மற்றும் இந்திய மக்கள் தங்களது இதிகாசங்களிலும், புராணக் கதைகளிலும் ஏராளமான வானியல் நிகழ்வுகள் குறித்து பதிவு செய்துள்ளனர்.

விண்வெளி ஆய்வு

தொழில்நுட்பம் வளரத் தொடங்கிய பிறகு, விண்வெளி ஆய்வும் பல கட்டங்களாக முன்னேறியது. தொலைநோக்கி கண்டறியப்பட்ட பிறகு, நமது சூரியக் குடும்பம் பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கத் தொடங்கியது. 20-ம் நூற்றாண்டில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விண்வெளி ஆய்வுத் துறையில் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டன.

அதன் விளைவாக மனிதன் முதன் முதலில் நிலாவில் கால் வைத்தான். நிலவில் கால் பதித்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங், "ஒரு மனிதனுக்கு இது மிகச்சிறிய காலடி, மனித இனத்திற்கு இது ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்" என்றார். அவர் கூறியபடி, விண்வெளி ஆய்வில் மனித இனம் இன்று அளப்பரிய வளர்ச்சிகளை கண்டு வருகிறது.

வாயேஜர்-1

அந்த வகையில், மனிதர்கள் உருவாக்கிய ஒரு விண்கலம் பூமியில் இருந்து 2,590 கோடி கிலோமீட்டர் தொலைவை கடக்க உள்ளது. ‘வாயேஜர்-1’ விண்கலம் வியாழன்(Jupiter) மற்றும் சனி(Saturn) கோள்களை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் 1977-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலம் 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணம் செய்து வருகிறது. வருகிற 18-ந்தேதி, அது பூமியில் இருந்து ஒரு 'ஒளி நாள்' தொலைவை கடக்கிறது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் பூமியில் இருந்து இவ்வளவு தொலைவை கடப்பது இதுவே முதல் முறையாகும்.

ஒரு ஒளி நாள் என்றால் என்ன?

ஒரு நாளில் ஒளி கடக்கும் தூரம்தான் 'ஒரு ஒளி நாள்'. ஒளி ஒரு வினாடியில் சுமார் 3 லட்சம் கிலோமீட்டர் செல்கிறது. ஒரு நிமிடத்தில் சுமார் 1 கோடியே 80 லட்சம் கிலோ மீட்டரும், ஒரு மணி நேரத்தில் சுமார் 108 கோடி கிலோமீட்டரும் செல்கிறது. இதே வேகத்தில் 24 மணி நேரம் சென்றால் சுமார் 2,590 கோடி கிலோமீட்டர் தூரத்தை கடக்கும். இதுதான் ஒரு ஒளி நாள்.

அதாவது, 1977-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ‘வாயேஜர்-1’, தற்போது வரை 49 ஆண்டுகள் 74 நாட்கள், அதாவது 17,971 நாட்கள் பயணம் செய்து, வருகிற 18-ந்தேதி பூமியில் இருந்து சுமார் 2,590 கோடி கிலோ மீட்டர் தொலைவை அடைகிறது.

24 மணி நேரம்

இப்போது பூமியில் இருந்து ‘வாயேஜர்-1’ விண்கலத்திற்கு ஒளியின் வேகத்தில் அனுப்பப்படும் தகவல், அங்கு சென்றடைய சுமார் 24 மணி நேரம் ஆகும். அதேபோல், ‘வாயேஜர்-1’ விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்படும் தகவல் இங்கு வந்து சேரவும் சுமார் 24 மணி நேரம் ஆகும். எனவே, ஒரு தகவலை அனுப்பி அதற்கான பதிலை பெற சுமார் 2 நாட்கள் ஆகும்.

முடிவே இல்லை

‘வாயேஜர்-1’ விண்கலத்திற்கு தேவையான மின்சாரம், புளூட்டோனியம்-238 மூலம் இயங்கும் கருவியில் இருந்து கிடைக்கிறது. இந்த மின்சாரம் ஆண்டுதோறும் குறைந்து வருவதால், மின்சாரத்தை சேமிக்க தேவையில்லாத சில கருவிகளை நாசா படிப்படியாக நிறுத்தி வருகிறது. எனவே பூமிக்கும், வாயேஜர்-1-க்கும் உள்ள சிக்னல் தொடர்பு 2030-ம் ஆண்டு முழுமையாக நின்றுவிடும்.

ஆனாலும் வாயேஜர்-1 விண்வெளியில் தொடர்ந்து பயணம் செய்துகொண்டே இருக்கும். சுமார் 40 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, அது 'ஏசி+79 3888' என்ற நட்சத்திரத்தின் அருகே செல்லும் என்று நாசா கூறுகிறது. அந்த நட்சத்திரத்தை அடையாமல், அதிலிருந்து சுமார் 1.7 ஒளியாண்டு தொலைவில் கடந்து செல்லும். பூமியுடன் தொடர்பு இல்லாத நிலையிலும், வாயேஜர்-1 தொடர்ந்து விண்வெளியில் பயணம் செய்துகொண்டே இருக்கும். அதன் பயணத்திற்கு முடிவே இல்லை.

வேற்றுகிரகவாசிகளுக்கான தகவல்

‘வாயேஜர்-1’ விண்கலத்தில் இருக்கும் மற்றொரு சுவாரஸ்யம், அதில் வேற்றுகிரகவாசிகளுக்கான தகவல் இடம்பெற்றிருப்பதுதான். இந்த பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறு எந்த கிரகத்திலும் உயிர்கள் இருப்பதாக இதுவரை நாம் கண்டறியவில்லை. ஆனால் ஒருவேளை ஏதாவது ஒரு கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் இருந்து, அவர்கள் ‘வாயேஜர்-1’ விண்கலத்தை கண்டறிந்தால், அவர்களுக்கு மனிதர்கள் பற்றியும், நமது பூமியைப் பற்றியும் தகவல் தெரிவிப்பதற்காக விஞ்ஞானிகள் ஒரு சிறப்பான ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.

‘வாயேஜர்-1’ விண்கலத்தில், தங்க முலாம் பூசப்பட்ட 12-அங்குல ‘தாமிர வட்டு’(Golden Record) இணைக்கப்பட்டுள்ளது. அதில் பூமியின் இயற்கை ஒலிகள், பறவைகளின் சத்தம், 55 மொழிகளில் வாழ்த்துகள்(தமிழிலும் உள்ளது), மற்றும் 115 புகைப்படங்கள் டிஜிட்டல் வடிவில் சேமிக்கப்பட்டுள்ளன.

வானியலாளர் கார்ல் சேகன்(Carl Sagan) தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் பதிவுகள், விண்வெளியில் ‘வாயேஜர்-1’ விண்கலத்தை இடைமறிக்கக்கூடிய எந்தவொரு அறிவார்ந்த வேற்றுக்கிரக நாகரிகத்திற்கும், பூமியின் வாழ்க்கை, அறிவியல் மற்றும் கலாசாரத்தைப் பற்றி எடுத்துரைக்கும் ஒரு தகவல் பெட்டகமாகச் செயல்படும் என்று கருதப்படுகிறது.

X