

இவரது நூலகத்துக்குள் சென்றால், கிராமத்தில் இருப்பது போன்ற உணர்வே இருக்காது. போட்டித் தேர்வுகள், காமிக்ஸ், ஆங்கில, இந்தி இலக்கியங்கள் மற்றும் சட்டம் தொடர்பான 3 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, குழந்தைகளுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொம்மைகளை கற்பிக்கப் பயன்படுத்துகிறார். இவருடன் பணியாற்றும் தன்னார்வலர்கள், குழந்தைகள் ஆன்லைனிலும் நேரடியாகவும் படிக்க உதவுகிறார்கள். இந்த நூலகத்தைக் கட்டிய பிறகு, தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஆர்வமுடன் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தேர்வுக்கு தயாராவதற்கு 36 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மற்றும் ஆங்கில வகுப்பு களும் நடத்தப்படுகின்றன. 24 வயதாகும் ஜட்டினின் முயற்சியால் குழந்தைகளின் வாழ்க்கை நிலை மாறியிருக்கிறது.
இது குறித்து ஜட்டின் கூறுகையில், நான் சட்டம் படித்துள்ளேன். தற்போது சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது டெல்லியில் உள்ள சமுதாய நூலகத்தில் பணியாற்றினேன். அங்கு கிடைத்த அனுபவம்தான் என் கிராமத்தில் நூலகத்தைக் கட்ட காரணமாக அமைந்தது.
நகர்ப்புற குழந்தைக்கு கிடைக்கும் வசதிகள் கிராமப்புற குழந்தைக்கு கிடைப்பதில்லை. டெல்லி நூலகத்தில் பணியாற்றியபோது, தாஷ்கா என்ற ஏழைச்சிறுமி நூலகம் வந்து படித்து ஆங்கிலத் திறனை வளர்த்துக் கொண்டார். இதைப் பார்த்துதான் நம் கிராமத்திலும் நூலகம் தொடங்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. அடிப்படை வாழ்க்கைக்கு புத்தகங்கள் மிக அவசியம். புத்தகங்கள் வேலை மற்றும் தேர்வுக்காக மட்டும் பயன்படுவதில்லை.
ஒருவரது சிந்தனையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்த என்னைப் போன்ற பலர், சிவில் சர்வீசஸ் தேர்வுக்காக கிராமத்திலிருந்து நகரங்களை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு குடும்பத்தினர் நிறைய செலவு செய்ய நேரிடுகிறது. என் குடும்பத்தார் எனக்கு செலவு செய்ய முடியாமல் பலமுறை தவித்ததை பார்த்திருக்கிறேன். இவற்றை எல்லாம் புரிந்துகொண்டுதான் கிராமத்தில் நூலகத்தைத் தொடங்கினேன் என்றார்.