தனித்துவ குணம் கொண்ட கரடி

கரடி ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு ஆகும். பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் என்னும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகளில் மிக பெரியது ஆகும்.
தனித்துவ குணம் கொண்ட கரடி
Published on

ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன. துருவக்கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகளின் கண்கள் சிறிதாக இருக்கும். இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை. ஆனால் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை. உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. கரடிகள், வேட்டையாடவும் எதிரிகளைத் தாக்கவும் நீண்டு வளர்ந்திருக்கும் தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்திருக்கும். பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது.

கரடிகள் சராசரியாக 4 அடி உயரமும், 115 கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை தாய் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும். குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் கரடிகள் மிகக் கடுமையான குளிர்காலம் முழுவதையும் ஆழ்ந்த உறக்கத்திலேயே கழித்துவிடுகின்றன. துருவப் பகுதியில் வாழும் கரடிகள் பல மாதங்கள் இப்படி உறங்கும் தனித்துவமான தன்மை கொண்டவை.

கரடிகள் இலை தழைகள் மற்றும் மாமிசம் போன்றவற்றையும் உண்ணும் அனைத்தும் உண்ணியாகும். பெரும்பாலும் பழங்கள், பழ வித்துக்கள், தண்டுகள், சில குறிப்பிட்ட இலைகள், மரப்பட்டைகள் போன்றவற்றை உண்ணுகின்றன. கரடிகள், மனிதர்களைவிடவும் தாவரவியல் அறிவு மிகுந்தவை. எந்தப் பருவத்தில் எந்த வகைக் காய்கனிகள் எங்கே கிடைக்கும் என்பதைக் கரடிகள் நன்றாக அறிந்திருக்கின்றன. இவை, நாவற்பழத்தை மிகவும் விரும்பி உண்ணும். மரங்களின் உச்சிவரை எளிதில் ஏறும் திறன் கரடிக்கு உண்டு. கரடிகள் தேனையும் மிகவும் விரும்பி உண்ணும். மலைக் குகைகளிலும், மரங்களின் உச்சிகளிலும் உள்ள தேன் கூடுகளை தேனுக்காக கரடிகள் எடுத்து கொள்ளும். இது கரையானையும் விரும்பி உணவாகக் கொள்கின்றன. கரடிகள் கரையான் புற்றில் வாய் வைத்து மிகுந்த ஓசையுடன் கரையான்களை அப்படியே உறிஞ்சிவிடும் திறன் கொண்டவையாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com