

உறவினர்களால் புறக்கணிக்கப்பட்ட அவர், அரசு வங்கியில் வேலைவாய்ப்பை பெற்று சமூக அங்கீகாரத்தை மீட்டெடுத்திருக்கிறார். அவரது பெயர் இந்தர்ஜித் கவுர். 30 வயதாகும் இவர் பஞ்சாப் மாநிலம் மொகாலி அருகில் உள்ள மாரவுலி காலன் கிராமத்தை சேர்ந்தவர்.
2011-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவுரை கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதற்கு கவுர் மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆசிட் வீசிவிட்டார். இதில் கவுரின் கண்கள், முகம் மற்றும் உடலின் சில பாகங்கள் கடும் பாதிப்புக்குள்ளானது. உடல் உறுப்புகள் சிதைந்து போனாலும் கவுர் மனவலிமையுடன் தைரியமாக போராடினார். தனது சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து பஞ்சாப், அரியானா மாநிலங்களில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர்களின் மறுவாழ்வுக்கு வழிவகை செய்யும் சிறப்பு கொள்கை உருவாக்கப்பட்டது.
எனது அம்மா மட்டும்தான் எனக்கு ஆதரவாக இருந்தார். சகோதரர் உள்பட உறவினர்கள் அனைவரும் என்னை ஒதுக்கினார்கள். படிப்பையும் கைவிட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டேன். எப்போதும் அழுது கொண்டிருந்தேன். நான் குடும்பத்திற்கு சுமையாகிவிட்டதாக உறவினர்கள் சொன்னார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்தேன். படிப்பை தொடருவதுதான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தேன். டேராடூனில் உள்ள பார்வை இழந்தோருக்கான கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தேன் என்பவர் பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்கிறார். ஆடியோ ரெக்கார்டிங் சார்ந்த படிப்பையும் முடித்திருக்கிறார். வங்கி பணிக்கான போட்டித்தேர்வு எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்தவர் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துவிட்டார். தற்போது டெல்லியில் உள்ள கனரா வங்கியில் கிளார்க்காக பணி புரிந்து வருகிறார்.