

சென்னை,
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (ஏ.ஐ.) வளர்ச்சியின் காரணமாக உலகளவில் இந்த ஆண்டு ஐ.டி. துறையில் 6 மாதத்தில் 1.28 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என லேஆப்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (ஏ.ஐ.) வளர்ச்சி என்பது உலகளவில் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலக தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் உற்பத்தித் திறனை உயர்த்தவும், செலவுகளைக் குறைக்கவும், பணிகளை தானியங்கிமயமாக்கவும் ஏ.ஐ. கருவிகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதே நேரம் இதனால் பாதிப்புகளும் ஏற்படுகிறது.
அதாவது உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வேலை இழப்புகளை கண்காணிக்கும் லேஆப்ஸ் அமைப்பு இது தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் உலகளவில் ஐ.டி. துறையில் 1.28 லட்சம் பணியாளர்கள் ஏ.ஐ. காரணமாக வேலை இழந்துள்ளனர். இது 2025-ம் ஆண்டு முழுவதும் பதிவான 1.24 லட்சம் வேலை இழப்புகளை விட அதிகமாகும்.
2020-ம் ஆண்டு உலகளவில் ஐ.டி. துறையில் சுமார் 80 ஆயிரம் பேர் வேலை இழந்தனர். இந்த வேலை இழப்பு 2021-ம் ஆண்டில் 15 ஆயிரமாக குறைந்தது. ஆனால் அதன் பின்னர் ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சி வேகமெடுத்ததால் 2022-ம் ஆண்டில் வேலை இழப்புகள் 1.65 லட்சமாக உயர்ந்தன. 2023-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2.65 லட்சமாக உயர்ந்து உச்சத்தை எட்டியது. 2024-ல் 1.52 லட்சமாகவும், 2025-ல் 1.24 லட்சமாகவும் குறைந்தாலும் 2026-ம் ஆண்டின் முதல் பாதியிலேயே 1.28 லட்சம் பேரின் வேலை பறி போயுள்ளது.
இந்த ஆண்டு (2026) ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாதங்களில் ஏற்பட்ட வேலை இழப்பு சதவீதத்தில் அமெரிக்கா 71.3 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 7.2 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி 3.4 சதவீதமாகவும், இங்கிலாந்து 2.6 சதவீதமாகவும் உள்ளன.
இந்தியாவில் ஏ.ஐ. காரணமாக ஏற்பட்ட வேலை இழப்புகளில் கல்வித்துறையே மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது கல்வித்துறையில் 21.7 சதவீதமும், நிதித்துறை 14.7, உணவுத்துறை 12.3, போக்குவரத்து 11, நுகர்வோர் பொருட்கள் துறை 11 சதவீதமும் என்ற அளவில் வேலை இழப்புகள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக ஆன்லைன் கல்வி நிறுவனங்கள், உள்ளடக்கத் தயாரிப்பு, பாடத்தொகுப்பு உருவாக்கம், மதிப்பீட்டு பணிகள் போன்றவற்றில் ஏ.ஐ. பயன்பாடு அதிகரித்துள்ளதால், கல்வித்துறையில் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. தரவு உள்ளீடு, வாடிக்கையாளர் ஆதரவு, அடிப்படை மென்பொருள் சோதனை, உள்ளடக்க உருவாக்கம், ஆவண பரிசீலனை, கணக்கியல் உதவி போன்ற மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகள் அதிக ஆபத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.