கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து பயணத்துக்கு பாதுகாப்பானதா? நிபுணர்கள் கருத்து

கொரோனா காலத்தில் பொது போக்குவரத்து சாதனங்கள் பயணத்துக்கு பாதுகாப்பானவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
PTI photo
PTI photo
Published on

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பொது போக்குவரத்து சாதனங்களான பேருந்து, ரெயில், மெட்ரோ ரெயில் ஆகியவற்றின் சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை தொடங்க வேண்டும் என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. ஆனால் இந்த பொது போக்குவரத்து சாதனங்களை கொரோனா காலத்தில் இயக்கினால், அவற்றில் பயணிப்பது பாதுகாப்பானதாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது பற்றி நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், இது பல்வேறு காரணிகளை பொறுத்தது. ஆனால் ஆபத்தை குறைப்பதற்கு வழிகள் உள்ளன. பேசும்போது, இருமும்போது அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள்தான் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் ஆகின்றன.

ஆனால் முக கவசம் அணியும் போதும், 6 அடி தொலைவுக்கு ஒருவருக்கு ஒருவர் இடைவெளியை பராமரிக்கிறபோதும், தொற்று பரவும் வாய்ப்பு குறைவு என்கின்றனர். பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து கொண்டு பயணிக்கலாம். பொதுமக்கள் தனிமனித இடைவெளியையும் பராமரிக்கும்படி அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நெரிசல் நேரத்தில் பயணம் செய்கிறபோது பஸ் நிறுத்தங்களில் மக்கள் கூட்டங்களை தவிர்க்க வேண்டும். முடிந்தவரையில் இருக்கைகளுக்கு இடையே வரிசைகளை தவிர்க்க வேண்டும் என கூறுகிறது.

மேற்பரப்புகள் ஆபத்தானவை என கருதப்படுகிறது. எனவே கிருமிநாசினி தெளித்து துப்புரவாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பயணத்தை பாதுகாப்பானதாக்க மாஸ்கோவிலும், ஷாங்காயிலும் கிருமிகளை கொல்லும் புற ஊதா கதிர்களை பயன்படுத்துகின்றனர். ஹாங்காங், ஹைட்ரஜன் பெராக்சைடு தெளிக்கும் ரோபோக்களை பயன்படுத்துகிறது. நியூயார்க்கில் இரவு நேரங்களில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு சுத்தம் செய்யப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com