

புதுடெல்லி,
ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், ஆப்பிள் ஸ்டோரில் ஆப்-களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவோ அல்லது பிற சேவைகளை பெறவோ மற்றும் அதன் ஆப் ஸ்டோரில் இருந்து பயன்பாடுகளை வாங்க, இனி உங்கள் இந்திய கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.
சந்தாக்களுக்கான தொகையை இனிமேல் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, இனி உங்கள் இந்திய கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தி, ஐ-கிளவுட்+ மற்றும் ஆப்பிள் மியூசிக் போன்ற ஆப்பிள் நிறுவன சந்தாக்களை இனி உங்களால் பெற முடியாது. ஆப்பிளிலிருந்து மீடியா உள்ளடக்கத்தையும் வாங்க முடியாது.
இந்தியாவில் உள்ள ஆப்பிள் பயனர்கள், யு.பி.ஐ அல்லது இணையவழி வங்கி சேவை(நெட்பேங்கிங்) முறையை பயன்படுத்தி வாங்கலாம்.
ஆப்பிள் நிறுவனம் தற்போது நெட்பேங்கிங், யுபிஐ மற்றும் ஆப்பிள் ஐடி பேலன்ஸ் ஆகியவற்றை மட்டுமே பணப் பரிவர்த்தனைகளுக்கான மூன்று வழிகளாக கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைமுறைக்கு வந்த இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய ஆட்டோ டெபிட் விதிகள், தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளை சீர்குலைத்து வருகின்றன. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளை தொடர்ந்து ஆதரிப்பதை கடினமாக்குகிறது. இதன்காரனமாக, இந்த நடவடிக்கையை ஆப்பிள் அமல்படுத்தியுள்ளது.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என் பி சி ஐ) 2020இல் யுபிஐ ஆட்டோ-பே அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
கட்டண முறையை மாற்றுவதில் ஆப்பிள் மட்டும் தனியாக இல்லை. ரிசர்வ் வங்கியின் ஆட்டோ டெபிட் விதிகள் புதுப்பிக்கப்பட்டதால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் கூகுளும் ஒன்றாகும்.கூகுள் ப்ளே மற்றும் யூடியூப்பில் தங்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணத்தை திரும்ப செலுத்துதல் முறையில் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதேபோல், நெட்பிளிக்ஸ் கடந்த ஆண்டு அதன் தளத்தில் யுபிஐ ஆட்டோ-பே மூலம் திரும்ப செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியது.