அலகாபாத் வங்கி உடனான இணைப்புக்கு இந்தியன் வங்கி இயக்குனர்கள் குழு ஒப்புதல்

அலகாபாத் வங்கி உடனான இணைப்புக்கு இந்தியன் வங்கியின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அலகாபாத் வங்கி உடனான இணைப்புக்கு இந்தியன் வங்கி இயக்குனர்கள் குழு ஒப்புதல்
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

பரிசீலனை

பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்தியன் வங்கியின் இயக்குனர்கள் குழு அலகாபாத் வங்கி உடனான இணைப்பு குறித்து பரிசீலனை செய்ய நேற்று (புதன்கிழமை) டெல்லியில் கூடியது. அதில் இணைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அத்துடன் மத்திய அரசுக்கு முன்னுரிமை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கி ரூ.5,000 கோடி பெறவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த இணைப்பு நாடு தழுவிய அளவில் செயல்படும் வலுவான நிறுவனம் ஒன்றை உருவாக்கும். இணைப்புத் திட்டத்தில் பிரதான வங்கியாக உள்ள இந்தியன் வங்கி தென் மாநிலங்களில் வலுவாக காலூன்றி இருக்கிறது. அதே சமயம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அலகாபாத் வங்கி நன்கு வேரூன்றி உள்ளது என இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பத்மஜா சந்துரு தெரிவித்தார்.

2019 மார்ச் இறுதியில் இருந்த நிதி நிலவரங்களின்படி இந்தியன் வங்கி-அலகாபாத் வங்கி இணைப்புக்குப் பிறகு உருவாகும் புதிய வங்கி நாட்டின் ஏழாவது பெரிய வங்கியாக இருக்கும். 2020 மார்ச் 31-ந் தேதி இணைப்பு நடவடிக்கை நிறைவடையும். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளில் ஐந்தாவது பெரிய வங்கியாக உருவெடுக்க வேண்டும் என விரும்புகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியன் வங்கி, ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் 75 சதவீத வளர்ச்சியுடன் ரூ.365 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.209 கோடியாக இருந்தது. அலகாபாத் வங்கி, ஜூன் காலாண்டில் ரூ.128 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் இவ்வங்கிக்கு ரூ.1,944 கோடி இழப்பு ஏற்பட்டு இருந்தது.

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று இந்தியன் வங்கிப் பங்கு 0.19 சதவீதம் குறைந்து ரூ.158.85-க்கு கைமாறியது. அலகாபாத் வங்கிப் பங்கு 2.31 சதவீதம் இறங்கி ரூ.31.70-ல் முடிவுற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com