மீன் வளர்ப்பிலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது

மீன் உற்பத்தியைப் பெருக்கிப் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள மீன் வளப் படிப்பு முக்கியத்துவம் பெற்றுவருகிறது.
மீன் வளர்ப்பிலும் நல்ல எதிர்காலம் இருக்கிறது
Published on

உணவு சார்ந்த தொழில்களுக்கு எந்தக் காலத்திலும் அழிவு இருந்ததில்லை. அந்த வகையில், ஆதி காலத்தில் ஈட்டியால் குத்தி மீன் பிடிக்கத் தொடங்கியதிலிருந்து வலை வீசி மீன்பிடிக்கும் இந்தக் காலம்வரை மீன்பிடித் தொழில் சீரான வளர்ச்சி அடைந்துவருகிறது. உலக அளவில் மீன்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதில் இருந்து மீன்பிடித் தொழிலின் வளர்ச்சியை அறியலாம். எனவே, மீன் பிடித்தல் சார்ந்த படிப்புகளின் மீது உங்களுக்கு ஆர்வம் இருந்தால், தாராளமாகப் படிக்கலாம்.

மீன் உற்பத்தியைப் பெருக்கிப் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும், வேலையற்ற இளைஞர்கள், மீனவ மகளிர், கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், மீன்வளம் சார்ந்த பல்வேறு பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும் இன்று மீன் வளப் படிப்பு முக்கியத்துவம் பெற்றுவருகிறது. இதற்காகவே நாகையை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் மீன் வளப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு (பிஹெச்.டி.) என மூன்று நிலைகளில் படிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.

ஆராய்ச்சிப் படிப்புகளாக மீன் வளர்ப்பு, மீன் வளர்ப்புப் பொருளாதாரம், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம், மீன் வள மேலாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. முதுகலைப் படிப்பான எம்.எப்.எஸ்சி. பிரிவில் மீன் வளர்ப்பு, நீர் வாழ் சுற்றுச்சூழல் மேலாண்மை, மீன் உயிரித் தொழில்நுட்பம், மீன் வளர்ப்புப் பொருளாதாரம், மீன்வளப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மீன் பதப்படுத்தும் தொழில்நுட்பம், மீன்வள மேலாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர இளங்கலைப் படிப்பான பி.எப்.எஸ்சி. பிரிவில் நான்காண்டு பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. பி.எப்.எஸ்சி.யில் சேர பிளஸ்-டூவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

இந்தியாவில் மட்டுமல்ல; வெளிநாட்டிலும் மீன் வளப் படிப்புக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. சொந்தமாக மீன் வளர்ப்புத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கும் மீன்வளப் படிப்பு வழிகாட்டுகிறது. இந்தப் படிப்புகளில் சேரவும், கல்வித் தகுதி, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு ஆகியவற்றைப் பற்றி அறிவதற்கும் http://www.tnfu.org.in/ என்ற பல்கலைக்கழக இணையதளத்தை அணுகலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com