ரூபாய் நோட்டில் இத்தனை ரகசியங்கள் இருக்கிறதா?

பாதுகாப்புக் கோடு முதல் பாரம்பரியச் சின்னங்கள் வரை... ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம்!
ரூபாய் நோட்டு
Published on: 

நாம் தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை பெரும்பாலும் பணமாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால், ஒரு ரூபாய் நோட்டை சற்று உற்று கவனித்துப் பார்த்தால் அதில் மகாத்மா காந்தியின் உருவப்படம், தேசியச் சின்னம், பல்வேறு மொழிகளில் இடம்பெற்றுள்ள எழுத்துகள், எண்கள், கோடுகள், சிறப்புக் குறியீடுகள் என ஏராளமான அம்சங்கள் இருப்பதை கவனிக்கலாம்.

இவை அனைத்தும் அழகுக்காக மட்டும் அச்சிடப்பட்டவை அல்ல. ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காரணம் உள்ளது. சில அம்சங்கள் போலி நோட்டுகளை கண்டறிய உதவுகின்றன. சில, பார்வையற்றவர்கள் நோட்டின் மதிப்பை அறிய உதவுகின்றன. இன்னும் சில, இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன. ரூபாய் நோட்டில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அம்சமும் எதைக் குறிக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பாதுகாப்புக் கோடு

ரூபாய் நோட்டை வெளிச்சத்திற்கு எதிராக வைத்துப் பார்த்தால், அதன் நடுப்பகுதியில் பாதுகாப்பு நூல் இருப்பதை காணலாம். சில நோட்டுகளில் இந்த நூல் நிறம் மாறுவது போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், அதில் ‘பாரத்’, ‘ஆர்.பி.ஐ’ போன்ற எழுத்துகள் காணப்படும். ரூபாய் நோட்டை போலியாக தயாரிப்பதை தடுப்பதற்கும், உண்மையான நோட்டை அடையாளம் காண்பதற்கும் இந்த பாதுகாப்பு அம்சங்கள் உதவுகின்றன.

பார்வையற்றவர்களுக்கான குறியீடுகள்

ரூபாய் நோட்டின் முன்பக்கத்தில் சில இடங்களில் தொட்டு உணரக்கூடிய வகையில் மேடான கோடுகள் மற்றும் குறியீடுகள் இருக்கும்.

இந்த அம்சங்கள் பார்வையற்றவர்கள் நோட்டின் மதிப்பை தொடுதல் மூலம் அடையாளம் காண உதவுகின்றன. ஒவ்வொரு மதிப்பிலான நோட்டுக்கும் ஏற்ப வெவ்வேறு வடிவிலான அடையாளங்கள் இடம்பெறுகின்றன.

பல மொழிகளில் ரூபாய் மதிப்பு

இந்தியா பல்வேறு மொழிகள் பேசப்படும் நாடாகும். இதனை கருத்தில் கொண்டு ரூபாய் நோட்டுகளிலும் பல இந்திய மொழிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

நோட்டின் முன்பக்கத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், பின்பக்கத்தில் 15 இந்திய மொழிகளிலும் நோட்டின் மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொழிப் பன்மைத்தன்மையும் பிரதிபலிக்கப்படுகிறது.

வாட்டர்மார்க்

ரூபாய் நோட்டை வெளிச்சத்திற்கு எதிராக வைத்துப் பார்த்தால் மகாத்மா காந்தியின் உருவமும், நோட்டின் மதிப்பும் மங்கலான நிழல் உருவமாகத் தெரியும். இதுதான் வாட்டர்மார்க், நோட்டின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உதவும் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களில் இதுவும் ஒன்றாகும்.

பாரம்பரியத்தை பறைசாற்றும் சின்னங்கள்

ரூபாய் நோட்டுகள் பண பரிவர்த்தனைக்கான கருவியாக மட்டுமின்றி, இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நோட்டுகளின் பின்பக்கத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று மற்றும் பண்பாட்டு சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, ரூ.10 நோட்டில் ஒடிசாவின் புகழ்பெற்ற கோனார்க் சூரியக் கோவில் சக்கரம் இடம்பெற்றுள்ளது.

இதுபோன்ற சின்னங்கள் மூலம் நாட்டின் தொன்மையான வரலாறும் பண்பாட்டு பெருமையும் வெளிப்படுத்தப்படுகின்றன.

காகிதம் அல்ல...

ரூபாய் நோட்டுகள் பார்ப்பதற்கு காகிதம் போன்று தோன்றினாலும், அவை சாதாரண காகிதத்தில் தயாரிக்கப்படுவதில்லை. நோட்டுகள் பருத்தி நாரை அடிப்படையாகக் கொண்ட பொருளால் தயாரிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக அவை சாதாரண காகிதத்தைவிட அதிக நீடித்த தன்மை கொண்டதாக இருக்கின்றன. அன்றாட பயன்பாட்டில் பலரது கைகளில் மாறி மாறிச் சென்றாலும், நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில் அவை தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு அர்த்தம்!

இப்படி நாம் தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டில் காணப்படும் ஒவ்வொரு எழுத்தும், கோடும், குறியீடும், படமும் ஏதோ ஒரு காரணத்திற்காக இடம்பெற்றுள்ளன.

பாதுகாப்பு, அடையாளம், பார்வையற்றோருக்கான வசதி, மொழிப் பன்மை, இந்திய வரலாறு மற்றும் பண்பாடு என பல்வேறு அம்சங்களை ரூபாய் நோட்டுகள் தன்னகத்தே கொண்டுள்ளன.

எனவே, இனி ரூபாய் நோட்டை கையில் எடுக்கும்போது வெறும் பணமாக மட்டும் பார்க்காமல், அதில் இடம்பெற்றுள்ள இந்த சுவாரசியமான அம்சங்களையும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள்!

X

Daily Thanthi
www.dailythanthi.com