

நியூயார்க்,
குறிப்பிட்ட நேரத்தை விட குறைவாகவும் அதிகமாகவும் தூங்குவதால் வேகமாக முதுமை அடையலாம் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மனித உடலின் 17 உறுப்பு அமைப்புகளில் உள்ள 23 உயிரியல் முதுமை குறியீடுகளைத் தூக்க நேரத்துடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளனர். தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவோ அல்லது 8 மணி நேரத்திற்கும் அதிகமாகவோ தூங்குபவர்களுக்குப் பல்வேறு உறுப்புகளில் உயிரியல் முதுமை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் இருப்பது உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 6 மணி நேரத்துக்கும் குறைவாக தொடர்ந்து தூங்குவதால் கார்டிசால் ஹார்மோனின் அளவு அதிகரிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
இந்த ஹார்மோன்கள் அதிகரிக்கும்போது, உடலில் வீக்கம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். இதனால் நீண்ட காலத்தில் செல்கள் மற்றும் பல்வேறு உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும். மேலும், நீண்டகாலமாக குறைவான தூங்குவதால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால், தூக்கத்தை அலட்சியப்படுத்தாமல், வயதுக்கு ஏற்ற அளவில் தினமும் போதுமான மற்றும் சீரான தூக்கத்தைப் பெறுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறைவாகத் தூங்குவது மட்டுமின்றி, தேவைக்கு அதிகமாகத் தூங்குவதும் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரிவித்தனர். குறிப்பாக 8 மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவது வேகமான உயிரியல் முதுமையுடன் தொடர்புடையதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிக நேரம் தூங்குவது வெளிப்படையாக உடலில் முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், சில நேரங்களில் அது ஏற்கனவே உடலில் இருக்கும் உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். குறிப்பாக மனச்சோர்வு மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட சில உடல்நலப் பிரச்சினைகளுடன் அதிக தூக்கம் தொடர்பு கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே, தூக்கத்தின் அளவு மட்டுமின்றி, தூக்கத்தின் தரம் மற்றும் சீரான தூக்கப் பழக்கத்துக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். தொடர்ந்து அதிக நேரம் தூங்கும் பழக்கம் இருந்தால், அதற்கான காரணத்தை கவனிப்பதும் அவசியம்.
தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக தூக்கத்தின் போது மூளையில் செயல்படும் ‘கிளிம்பாட்டிக் சிஸ்டம்’ மூளையில் தேங்கும் கழிவுப் பொருட்களை அகற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆழ்ந்த தூக்கத்தின் போது இந்த அமைப்பு சிறப்பாக செயல்பட்டு, மூளையில் உருவாகும் சில கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் மூளையின் இயல்பான செயல்பாடுகளுக்கும், செல்களின் பராமரிப்புக்கும் தூக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
எனவே, தினசரி போதுமான மற்றும் சீரான தூக்கத்தைப் பெறுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். சீரான தூக்கப் பழக்கத்தை கடைப்பிடிப்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.