

புதுடெல்லி,
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாதம் 1ந்தேதி அன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இந்தியாவில் 2022-2023ம் நிதியாண்டில், டிஜிட்டல் கரன்சி(நாணயம்) முறை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் டிஜிட்டல் நாணயம் தொடர்பாக ஆய்வறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (ஐ எம் எப்) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையை வெளியிட்டு நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா கூறுகையில், உலகில் ஏறத்தாழ 100 நாடுகள் மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயத்தை குறித்து ஆராய்ந்து வருகின்றன என்று தெரிவித்தார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில்,
டிஜிட்டல் நாணயங்கள் இப்போது செயல்முறைக்கு வந்துவிட்டன.மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயங்களுக்கு இப்போது ஆரம்பகட்ட நாட்களே, அவை எவ்வளவு தூரம், எவ்வளவு வேகமாகச் செல்லும் என்பது எங்களுக்குத் தெரியாது.
மத்திய வங்கிகள், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான திறனை வளர்த்து வருகின்றன.
மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயங்கள் விவேகமான முறையில் வடிவமைத்து செயல்படுத்தப்பட்டால், டிஜிட்டல் நாணயங்கள் அதிக பாதுகாப்புடன் கூடியதாக, மிகக்குறைந்த விலையில், எளிதில் கிடைக்கும் ஒன்றாக மாறிவிடும்.
உதாரணத்துக்கு, இப்போதைய காலகட்டத்தில் கரீபியன் தீவுகளில் உள்ள பஹாமாஸ் நாட்டில், சேண்ட் டாலர் என்றழைக்கப்படும் டிஜிட்டல் நாணயங்கள் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
அதேபோல, சுவீடனில் உள்ள மத்திய வங்கியான ரிக்ஸ் வங்கி, டிஜிட்டல் நாணயங்கள் தொடர்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறது.
அண்டை நாடான சீனாவில், ரென்மின்பி எனப்படும் டிஜிட்டல் நாணயங்கள்(இ-சி என் ஐ) தற்போது நடைமுறையில் உள்ளன. இந்த டிஜிட்டல் நாணயங்கள் மூலம் அந்நாட்டின் யுவான் நாணய மதிப்பின்படி, 10 கோடிக்கும் அதிகமான தனி நபர்கள், நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.