எலியட்ஸ் கடற்கரையில், தியாக சின்னம்

சென்னை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்பவர்களின் கண்களுக்கு சீறி வரும் கடல் அலைக்கு அடுத்தபடியாக, விருந்து படைப்பதாக அமைவது ‘கார்ல் ஸ்மித்’ நினைவிடம் என்று சொன்னால் அது மிகையல்ல.
எலியட்ஸ் கடற்கரையில், தியாக சின்னம்
Published on

கடற்கரைக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைத்து தரப்பினரும் அதனை பார்க்க தவறுவதும் இல்லை. அதன் முன்னாள் நின்றுகொண்டு உற்சாகமாக செல்பி எடுத்து செல்வதை தினந்தோறும் காணமுடியும்.

வரலாற்று சின்னமான, எழில் மிகுந்த கார்ல் ஸ்மித் நினைவிடத்தை பலரும் தமிழ் திரைப்படங்களில் பார்த்திருப்பார்கள். ஆனால் அதற்கு பின்னால் உள்ள தியாக வரலாறு பெரும்பாலும் தற்போதைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. டென்மார்க் நாட்டில் 1901-ம் ஆண்டு பிறந்தவர் கார்ல் ஸ்மித். இவர் 1921-ம் ஆண்டு சென்னையின் கிழக்கு ஆசியாட்டிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 1930-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி சென்னை எலியட்ஸ் கடற்கரையில் கார்ல் ஸ்மித் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஆங்கிலேய பெண் ஒருவர் கடலில் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென அந்த பெண் கடல் அலையில் சிக்கி, உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த, கார்ல் ஸ்மித் கடலில் குதித்து, தத்தளித்த அந்த பெண்ணை காப்பாற்றினார். ஆனால் துரதிருஷ்டவசமாக கார்ல் ஸ்மித் கடலில் மூழ்கி பலியானார். தன்னுயிரை கொடுத்து, பெண்ணின் உயிரை அவர் காப்பாற்றினார். அவருடைய தியாகம், மனிதநேயம், துணிச்சல் மற்றும் வீரத்தை போற்றும் விதமாக அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த சர் ஜார்ஜ் பிரடரிக் ஸ்டான்லி, எலியட்ஸ் கடற்கரையில் கார்ல் ஸ்மித்துக்கு நினைவிடம் கட்டினார். பழமைவாய்ந்த கார்ல் ஸ்மித் நினைவிட கட்டிடம் கடல் காற்றால் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து புதுப்பிக்கும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி செய்தது. புதுப்பிப்பு பணிகள் கார்ல் ஸ்மித் நினைவிடத்துக்கு, மேலும் மகுடம் சூட்டுவதாக இருக்கிறது.

எலியட்ஸ் கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் தியாக சின்னமான கார்ல் ஸ்மித்தின் நினைவிடம், இன்று (திங்கட்கிழமை) 89-வது வயதை எட்டுகிறது. கார்ல் ஸ்மித் நினைவிடம் வலியுறுத்தும் தியாகம், ஆபத்தில் பிறருக்கு உதவவேண்டும் என்ற நோக்கங்களை அனைவரும் கடைப்பிடித்தால்தான் மனிதநேயம் மேலும் தளிர்விடும். மனித குலமும் தழைத்தோங்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com