

மூங்கில். மரமாக வளர்ந்தாலும், மூங்கிலானது, புல் வகையைச் சேர்ந்ததாகும்.
தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய பயிராக மூங்கில் இருக்கிறது. இங்கு மூங்கில் இல்லாத நாடுகளைக் காண்பது அரிது.
தமிழ்நாட்டில் வறட்சியான மாவட்டங்களிலும், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலும் கூட நன்கு வளரும் தன்மை கொண்டதாக மூங்கில்கள் இருக்கின்றன. மூங்கிலில் உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட இன வகைகள் உள்ளன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் இருக்கின்றன. இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன.
மூங்கில் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் பருமன், அதிகபட்சமாக 1 சென்டிமீட்டரில் இருந்து 30 சென்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மரத்தின் ஆயுள் காலம் 60 ஆண்டுகள் ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் 4 ஆயிரம் மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்களாகும்.
ஒரு மனிதனுக்கு ஒரு ஆண்டில் தேவைப்படும், ஆக்சிஜன் என்னும் பிராணவாயு 292 கிலோ என்றும், ஒரு நாளைக்கு 800 கிராம் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு மூங்கில் குத்து ஒரு ஆண்டில் சுமார் 310 கிலோ உயிர்க்காற்றை தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
தொழிற்சாலை மற்றும் கிராமங்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், மண் அரிப்பைத் தடுத்து, மண் வளத்தைக் காப்பதற்கும் மூங்கில்கள் பயன்படுகின்றன. இந்தியா மற்றும் சீனாவில், காகிதக் கூழ் தயாரிக்க மூங்கில்கள்தான் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. மேலும் கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கவும், கட்டுமானத்திற்கும் மூங்கில்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் உணவு தயாரிக்கவும் மூங்கிலைப் பயன்படுத்துகிறார்கள். மூங்கிலின் கணுக்களில் காணப்படும் ஒருவகை திரவம், மருந்துப் பொருட்கள் தயாரிக்க உதவியாக உள்ளது.