

அதேபோல, ஒருசில ஆசான்களின் முயற்சியினாலும், இந்த கலை உலகளவில் பிரபலமாகிறது. குறிப்பாக நாகர்கோவிலை சேர்ந்த செல்வன் அடிமுறை கலையை பிரபலப் படுத்த, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதை அவர் சொல்ல தெரிந்து கொள்வோம்.
அடிமுறையின் அடிப்படை என்ன?
சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, களரி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமே நாட்டு அடிமுறை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மனின் தளபதி அனந்த பத்மநாபன் இந்த தற்காப்புக் கலையை பிரபல படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்த கலையில் எதிராளியை கையாலும் காலாலும் தாக்கி வீழ்த்துவர். ஆயுதம் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, அடிமுறை உதவும்.
உங்களுக்கு எப்படி பழக்கமானது?
அடி பயின்றால், அது நாட்டு அடியாகத்தான் இருக்கவேண்டும் என்ற சொல்லாடல், கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளில் உண்டு. அப்படிதான் நானும், தற்காப்பு கலை பயில ஆசைப்பட்டேன். அதுவும் நம் நாட்டு அடியான அடிமுறை பயில தொடங்கினேன். இடைவிடாத பயிற்சியின் காரணமாய், அடிமுறை கலையை சிறப்பாக கற்றுக்கொண்டேன்.
அடிமுறை கலையில் முழுமையாக ஐக்கியமானது எப்போது?
திருப்பூரில் தங்கியிருந்து வேலைபார்த்தபோது, அடிமுறை சங்கமம் விழா சென்னையில் நடைபெற்றது. இதை தெரிந்துகொண்டு, என்னுடைய நண்பனுடன் சென்னைக்கு கிளம்பினேன். அங்கு பல ஊர்களில் இருந்தும், அடிமுறை கலைஞர்கள் வந்திருந்தனர். தங்களுடைய ஜோடியுடன் (நண்பர்) ஆக்ரோஷமாக சண்டையிட்டு காண்பித்து, அசத்தினர். இந்நிலையில் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. வெளியூரில் தங்கியிருந்து பணிபுரிந்த காரணத்தினால், வெகுநாட்களாக பயிற்சி செய்யவில்லை. இருப்பினும் அடிமுறையை குமரி மாவட்ட ஸ்டைலில் நிகழ்த்தி காட்டினோம். மற்றவர்களை காட்டிலும், எங்களது உடல் அசைவு, பாத சுவடு, அடவு, கம்பு குத்து போன்றவையெல்லாம் தனித்துவமாக இருந்ததால் பாராட்டுகள் குவிந்தன. விசில் பறந்தன.
எப்போதிலிருந்து கற்றுக்கொடுக்க தொடங்கினீர்கள்?
அடிமுறை கலையின் பிறப்பிடம் குமரி என்பதால், பயிற்சியும், உடல் அசைவும் தனித்துவமாக இருக்கும். அதன் காரணமாய், சென்னை கலைவிழாவிற்கு பிறகு, நிறைய மாணவர்கள் என்னை தொடர்பு கொண்டு, அடிமுறை கற்றுக்கொடுக்க வலியுறுத்தினர். சிலர் திருப்பூர் வரை வந்து, என்னுடன் தங்கியிருந்து ஓய்வு நேரத்தில் அடிமுறை பயின்றனர். தெரிந்தவரை கற்றுக்கொடுப்பதைவிட, அடிமுறை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு முறையாக கற்றுக்கொடுக்க விரும்பினேன். அதனால் திருப்பூர் வேலைக்கு முழுக்குப்போட்டுவிட்டு, சொந்த ஊர் திரும்பினேன். அடிமுறையை முழுமையாக கற்றுக்கொண்டு, இன்று பலருக்கும் கற்றுக்கொடுக்கிறேன்.
அடிமுறையில் என்னென்ன நிலைகள் இருக்கின்றன? நீங்கள் என்ன நிலையை கடந்திருக்கிறீர்கள்?
மழலை வீரன், வீரன், மாவீரன், இளமல்லன், மல்லன், மாமல்லன், சூரன், அசூரன், ஈஸ்வரன், ராவணன், ராஜராஜன், பரணிவீரன், களரிவீரன், பரந்தலைவீரன், முதுநில வீரன், அருகன், மூதன், ஆசான், அகத்தியர், திருமூலர், சித்தர் இப்படி பல நிலைகள் உண்டு.
21 நாட்கள் தொடங்கி 90 நாட்கள் வரை, அடிமுறையின் நிலைக்கு ஏற்ப, பயிற்சி காலம் மாறுபடும். ஆசான் வரை பயிற்சி பெறலாம். அதற்கு மேல் இருக்கும் அகத்தியர்-திருமூலர்-சித்தர் இவை மூன்றுமே ஆராய்ச்சி நிலைகள். வர்மம், அதுதொடர்பான வைத்தியம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிலைகள் இவை. அந்தவகையில் நான் ஆசான் நிலையை கடந்து, இப்போது ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
அடிமுறையை யாரெல்லாம் கற்கலாம்?
சொல்வதை புரிந்துகொள்ளக்கூடிய திறமை இருக்கும் 4 வயது குழந்தை தொடங்கி, வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் கற்கலாம். இருப்பினும் 12 முதல் 25 வயதில் பழகும்போது, வேகமாக கற்றுக்கொள்ளலாம்.
நிறைய பேர் அடிமுறை கற்றுக்கொடுக்கிறார்கள். உங்களுடைய தனித்துவம் என்ன?
அடிமுறையை மையப்படுத்தி, உலக கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறேன். இதில் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஜப்பான், இங்கிலாந்து, கனடா, தைவான், தாய்லாந்து உள்பட 18 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்கு அடிமுறை பற்றிய விழிப்புணர்வும், வீடியோ கான்பிரன்சிங் முறையில் அடிமுறை பயிற்சியும் வழங்கப்படுகிறது.
சாதனை முயற்சிகளில் ஈடுபட்டது உண்டா?
27 நாடுகளில் வாழும் 200 அடிமுறை கலைஞர்களை இணையம் வழியாக ஒருங்கிணைத்து, 12 மணிநேரம் தொடர்ச்சியாக அடிமுறை பயிற்சிகள் செய்து சாதனை நிகழ்த்தினோம். அதேபோல, தெலுங்கானா மாநிலத்தில், பள்ளி மாணவிகளுக்கு அடிமுறை தற்காப்பு கலையை கற்றுக்கொடுத்து, அவர்களில் சிறந்த 1500 மாணவிகளை தேர்ந்தெடுத்து, அவர்களை ஒரே மைதானத்தில் ஒருங்கிணைத்து, அடிமுறை கலையை நிகழ்த்தி காட்டச்செய்து சாதனை முயற்சியில் ஈடுபட்டோம்.
மற்ற தற்காப்பு கலைக்கும், அடிமுறைக்கும் என்ன வித்தியாசம்?
மற்ற தற்காப்பு கலைகள், உடலை இரும்பு போல வலிமையாக்கும். ஆனால் அடிமுறை, உடலை லேசாக வைத்திருக்கும். ஸ்பிரிங் போல அங்கும் இங்கும் அசைந்து, துள்ளிக்குதிக்க செய்யும். இது தற்காப்பு கலை என்பதை தாண்டி, சிறந்த உடற்பயிற்சியும்கூட. குறிப்பாக குடும்ப பெண்களுக்கு ஏற்ற, ஆரோக்கிய பயிற்சி இது.