

திருடர்கள் என்றால் ஒரு காலத்தில் இதுதான் அடையாளமாக இருந்தது. அதாவது, அப்படி இருந்ததாக அந்த கால சினிமாக்களில் பார்த்து இருக்கிறோம்.
தயங்கி தயங்கி வரும் ஏழைச் சிறுவன், கடைக்காரருக்கு தெரியாமல் பெட்டிக்கடையில் இருந்து ஒரு பன்னை திருடிக்கொண்டு ஓடுவான். கடைக்காரர் அவனை விரட்டிப்பிடித்ததும், அய்யா அடிக்காதீங்கய்யா, சாப்பிட்டு மூணு நாளாச்சி, பசி தாங்கல என்று பரிதாபமாக கெஞ்சுவான். இப்படிப்பட்ட காட்சிகளையும் படங்களில் பார்த்து இருக்கலாம்.
அப்போதெல்லாம், பசி கொடுமையினால் திருட்டுகள் நடப்பதாக காட்டினார்கள். அதாவது பசியை போக்குவதற்காக திருடுவதாக காட்டினார்கள்.
அப்போது நாட்டு நடப்பும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது.
பசிக்காக திருடுகிற காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்வதற்காக திருடுகிறவர்கள்தான் இப்போது அதிகம். நவீன செல்போன் வாங்குவதற்காக, சொத்துகள் வாங்குவதற்காக, காதலிக்கு செலவழிப்பதற்காக, கள்ளக்காதலிக்கு நகை வாங்கிக்கொடுக்க என்று... திருடுவதன் நோக்கம் மாறிவிட்டது. திருடர்களுக்கு என்று இருந்த ஓர் அடையாளமும் மாறிவிட்டது.
பனியன்-லுங்கி என்று இருந்த திருடர்கள்... பேண்ட்-சட்டை, ஷூ, மோட்டார் சைக்கிள் என்று ஹைடெக்காக மாறிவிட்டார்கள். உள்ளூர் திருடர்கள் மட்டுமின்றி வெளியூர் திருடர்களும் அதிகரித்து விட்டார்கள். வெளியூர்களில் இருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து திருடிவிட்டு கம்பியை நீட்டிவிடுகிறார்கள். வாடகைக்கு வீடு எடுத்து தங்கி திருடுகிறவர்களும் உண்டு. சில சொகுசான திருடர்கள், கைவரிசையை காட்டியதும் விமானத்தில் பறந்துவிடுகிறார்கள்.
ஆக திருட்டு என்பது வயிற்றுப்பிழைப்புக்காக என்று இருந்த நிலை மாறி, சொகுசு வாழ்க்கைக்காக என்று ஆகிவிட்டது. குறுக்கு வழியில் அதிகம் சம்பாதித்து சொகுசாக வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரிப்பதே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஆகும்.
தோற்றத்தை பொறுத்தமட்டில் அவர்கள் மக்களோடு மக்களாக ஐக்கியமாகிவிட்டார்கள். யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்-திருடர்கள்? என்று கண்டுபிடிக்க முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்பதால், அறிமுகம் இல்லாத எல்லோரையுமே சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. சில சமயங்களில் நல்லவர்களையும் சந்தேகிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படுகிறது.
பொது இடங்களிலோ அல்லது புதிதாக யாராவது வந்து பேசும் பொழுதோ, எதிரே செல்பவரையோ அல்லது பின் தொடர்ந்து வருபவர்களையோ முழுமையாக நம்பமுடியவில்லை.
நகரங்களில் எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனேயே இருக்கவேண்டி இருக்கிறது. குறிப்பாக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது அது காலையில் நடைபயிற்சி செல்வதாக இருந்தாலும் சரி; கடைக்கு செல்வதாக இருந்தாலும் சரி; அலுவலகம் செல்வதாக இருந்தாலும் சரி கவனச்சிதறல்கள் இல்லாமல் இருந்தால்தான் தப்பித்தோம். இல்லையேல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடையாது.
வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பு, செல்போன்களை பறித்துக்கொண்டு ஓடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து இருப்பது நகரவாசிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து நிம்மதியாக கோலம்கூட போட முடியவில்லை. ஆள் நடமாட்டம் குறைவான அமைதியான அந்த நேரத்தில் எங்கிருந்தோ இரு சக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் கிடக்கும் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடி விடுகிறார்கள். இதேபோல் நடைபயிற்சிக்கு செல்லும் போதும் பாதுகாப்பு கிடையாது. சங்கிலியை அறுத்துக்கொண்டு சிட்டாய் பறந்து விடுகிறார்கள்.
ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கதவை உடைத்து கொள்ளையடிக்கிறார்கள். தண்டனை பற்றிய பயம் கொஞ்சமும் இல்லாமல் கொலை சம்பவங்களும் அரங்கேறுவதை பார்க்கிறோம்.
சட்டங்கள் இருந்தாலும், குற்றவாளிகள் அதன் ஓட்டைகளில் புகுந்து எளிதாக தப்பிவிடுகிறார்கள். தண்டனை பற்றிய பயம் இல்லாததால் நாட்டில் குற்றங்களுக்கு பஞ்சம் இல்லை.
இதனால் குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. அதாவது மக்கள் மத்தியில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, குற்ற செயல்களால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் காவல் துறை மேற்கொள்கிறது.
அப்படி காவல்துறை மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளில் முக்கியமானது கண்காணிப்பு கேமராக்களை (சி.சி.டி.வி.) பொருத்துவது.
கொலை செய்து விட்டு தப்பி ஓடுவது, கொள்ளையடித்துவிட்டு பிறருக்கு சந்தேகம் வராத வகையில் சாகவாசமாக நடந்து செல்வது, பொது இடத்தில் நடக்கும் அடிதடி சம்பவங்கள், விபத்துகளை ஏற்படுத்திவிட்டு செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பது, போக்குவரத்து விதி மீறல்கள் போன்றவற்றில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை நகரில் அடிக்கடி சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. சமீபத்தில், ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட முயற்சிக்க, அந்த பெண் அவர்களுடன் போராட, இளைஞர்கள் அந்த பெண்ணை தரதர வென்று ரோட்டில் இழுத்துச் சென்ற சம்பவம் பார்த்தோரின் நெஞ்சங்களை பதற வைத்தது.
நகரங்களில் பாதுகாப்பு கருதி ஏராளமானோர் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி இருக்கிறார்கள். வீட்டுக்குள் இருந்தபடியும், வீட்டில் இல்லாத சமயங்களிலும் தங்கள் வீட்டுக்கு யார்-யார் வந்து செல்கிறார்கள்? வாசலில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய இந்த கேமராக்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. வெளியூர்களில் இருக்கும் போது கூட செல்போன் மூலம், வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்க்கும் வசதியும் உள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பரந்து விரிந்த நகரங்களில் ஒவ்வொரு இடத்திலும் பாதுகாப்புக்காக போலீசாரை நிறுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று.