

1931-களில் சிறிய தீப்பெட்டிகளில் அவரின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. விடிய விடிய கிராமங்களில் நாடகம் நடக்கும். நாடகத்தை முடிக்கும் போது அவரைப்பற்றி ஒரு பாட்டு பாடாமல் முடிக்க முடியாது. தமிழகத்தில் அவரின் படங்கள், அவர் பெயரிட்ட நூல்கள் அத்தனையும் தடை செய்யப்பட்டன. அவர் யார்? அவர்தான் பாஞ்சால சிங்கம் பகத்சிங். இவ்வளவுக்கும் அவர் தமிழகம் வந்ததே இல்லை.
காந்திஜிக்கு இணையாக பகத்சிங்கும் அப்போது கீர்த்தி பெற்று இருந்தார் என்று காங்கிரஸ் கட்சியின் வரலாற்று ஆசிரியர் பட்டாபி சீத்தாராமையா எழுதியுள்ளார். பகத்சிங் பிறந்தபோது அவர் அப்பா கிரண்சிங் மற்றும் சித்தப்பா, பெரியப்பா உள்ளிட்டோர் விடுதலைப் போராட்ட வீரர்களாக சிறையில் இருந்தனர்.
பகத்சிங் குறித்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப்பிறகு லண்டனுக்கே சென்று 21 ஆண்டுகள் கழித்து கொலையாளியை பழிவாங்கிய உத்தம் சிங் பின்வருமாறு நினைவுகூருகிறார்;
ஜாலியன் வாலாபாக் படுகொலைச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், 12 வயதான பகத்சிங் பள்ளிக்குச் செல்லாமல், புகைவண்டியில் ஏறி, அமிர்தசரஸ் சென்று, அந்த இடத்தை பார்த்தான். அந்த இடத்திலேயே உயிரற்றவனைப் போல் பல நிமிடங்கள் நின்று கொண்டிருந்த அவன், அந்த மண்ணை எடுத்துத் தன் நெற்றியில் பூசிக்கொண்டான். கொஞ்சம் மண்ணை, ஒரு சின்னக் கண்ணாடிப்புட்டியில் போட்டுக் கொண்டான். அவன் வீடு திரும்பியதும், அவனுக்காக வைத்திருந்த உணவையும் மாம்பழங்களையும் உண்ணுமாறு அவன் சகோதரி கூறினாள். எல்லாவற்றையும் விட, அவனுக்கு மிகப் பிடித்தமான மாம்பழங்களைக் கூட உண்ணாமல், அந்த இரவு அவன் உண்ணாவிரதமிருந்தான். உணவு உண்ணுமாறு சொன்னபோது, தன் சகோதரியைப் பக்கத்தில் அழைத்துச் சென்று, ரத்தம் கலந்த அந்தப் புனித மண்ணைக் காட்டினான். சாப்பிடவே இல்லை. அவன் குடும்பத்தினர் கூற்றுப்படி, அவன் தினந்தோறும், புத்தம் புது மலர்களை அந்த மண்ணில் வைத்து அதன் மூலம் எழுச்சியைப் பெற்றுக் கொண்டிருந்தான் என்று கூறுகிறார்.
ஒரு கையில் மதம், மறுகையில் புரட்சி என்று உருவானவர்கள் மத்தியில் பகத்சிங் மத அடையாளங்களை துறந்து நின்றார். லாலாலஜபதி ராய் கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரி சாண்டர்ஸ் கொல்லப்பட்டது, தொழிலாளர்களின் உரிமையை பறித்த பிரிட்டிஷாரின் தொழில் தகராறு மசோதாவை எதிர்த்து டெல்லி சட்டசபையில் யாருக்கும் காயம் படாமல் குண்டு வீசியது ஆகியவை பகத்சிங் பங்கேற்ற இரு முக்கிய நிகழ்வுகள் ஆகும்.
இவற்றின் பின்னணி என்ன?
அடிமை இந்தியாவுக்கு சீர்திருத்தங்கள் வழங்குவது சம்பந்தமாக அன்றைய பிரிட்டிஷ் அரசு 1928-ல் சைமன் கமிஷனை இந்தியாவுக்கு அனுப்பியது. கமிஷனின் 7 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை. சைமன் கமிஷனே திரும்பிப் போ என்ற குரல் இந்தியாவில் திக்கெட்டும் ஒலித்தது.
பஞ்சாப் மாவீரர் லாலா லஜபதிராய் தலைமையில் சைமன் கமிஷனை எதிர்த்து லாகூரில் மாபெரும் கண்டன பேரணி நடந்தது. நிராயுதபாணியாக ஊர்வலத்தில் வந்த 62 வயதான லஜபதிராயை பிரிட்டிஷ் போலீஸ் அடித்து வீசியது. மரணத்தின் விளிம்பில் அவர் தற்காலிகமாக பிழைத்தார்.
என் மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் சவப்பெட்டியின்மீது அடிக்கப்பட்ட ஆணிகளாகும் என்று லஜபதிராய் முழங்கினார். எனினும் காயத்தின் காரணமாக விரைவிலேயே அவர் மாண்டார்.
லஜபதிராயின் படுகொலைக்கு இந்திய இளைஞர்கள் சாண்டர்சின் கணக்கை முடித்து பதில் தந்தனர். இதேபோல் டில்லி சட்டசபை வெடிகுண்டு வீச்சில் பகத்சிங்கும், பி.கே. தத்தும் தமது அமைப்பின் முடிவுபடி ஈடுபட்டனர். லாகூர் இரண்டாம் சதி வழக்கு புனையபட்டது. சட்டசபை குண்டு வீச்சுக்கு பின் பகத்சிங்கும், பி.கே. தத்தும் தப்பி ஓடாமல் கைதாகினர்.
லாகூர் சதி வழக்கில் அரசு தரப்பில் 450 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். பகத்சிங் தரப்பில் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளவில்லை. சாட்சிகளும் இல்லை. விசாரணைக் குறித்து அவர்கள் கவலைப்படவே இல்லை. நீதிமன்ற கூண்டுகள் பிரசார மேடையாகின.
விசாரணை நாடகத்தின் இறுதியில் மூவருக்கு தூக்கு தண்டனையும், ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் முதல் ஓர் ஆண்டு வரை கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்கெதிராக இந்தியா கொதித்து எழுந்தது.லாகூர், டெல்லி, அலகாபாத், அமிர்தசரசில் போலீசாரோடு மோதல் நடந்தது. பம்பாயில் (தற்போதைய மும்பை) பள்ளிகளும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டன.
பகத்சிங் தந்தை மகனுக்காக அரசாங்கத்திற்கு கருணை மனு அனுப்பினார். துடித்துப்போன பகத்சிங் அப்பாவிற்கு கடிதம் எழுதினார். நான் என் முதுகில் குத்தப்பட்டதாக உணர்கிறேன். இதை வேறு யாரேனும் செய்திருந்தால் துரோகம் என்றே கருதியிருப்பேன். உங்களைப் பொறுத்தவரை இது மோசமான பலவீனம் என்றே சொல்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
எனினும் பதிலாக பகத்சிங் அரசாங்கத்திற்கு தனி கடிதம் கொடுத்தார். அதில், நாங்கள் எங்கள் நாட்டிற்காக உயிரைக் கொடுப்பதில் பெருமைப்படுகிறோம். நாங்கள் யுத்தக்கைதிகள். குற்றவாளிகளை கொல்வது போல் எங்களைத்தூக்கில் போடாதீர்கள். எதிரி வீரர்களை வீழ்த்துவது போல் ராணுவத்தால் எங்களை சுட்டுக்கொல்லுங்கள் என்று எழுதி இருந்தார்.
இந்த சவாலை ஏற்க பிரிட்டிஷ் அரசிற்கு தெம்பு, திராணி இல்லை. குறித்த நேரத்திற்கு முன்பே ரகசியமாக பகத்சிங் உள்பட மூவரையும் பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்டு கொன்றது. இந்தியா கண்ணீராலும், ஆவேசத்தாலும் சிவந்தது. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பிறகு கராச்சியில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் பண்டித நேரு பேசினார்.
அப்போது, பகத்சிங் இப்போது இல்லாமல் போனாலும் அவரின் அஞ்சாமையும், துணிவும், தீரமும் இன்னும் வாழ்கின்றன. இங்கிலாந்தோடு மேஜையில் நாம் ஒப்பந்தம் செய்துக்கொள்ள முயலும் போதெல்லாம் அவர்களுக்கும், நமக்கும் நடுவே பகத்சிங்கின் பிணம் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
பகத்சிங்கின் உடல் 23 ஆண்டுகளே உயிர்வாழ்ந்தது. ஆனால் பகத்சிங் என்ற பெயர் இந்திய வரலாறு நெடுகிலும் நிலைத்து விட்டது. சாவின் வாசலில் நின்று பகத்சிங் தன் உடன் இருந்தவர்களை பார்த்து, ஏ! வெள்ளைக்கார அதிகாரிகளே நீங்கள் பாக்கியசாலிகள். இந்திய மண்ணின் வீரர்கள் தம் நாட்டு விடுதலைக்காக புன்னகையோடு மரணத்தை தழுவும் காட்சியை நேரில் பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று சிரித்து கொண்டே கூறினார்.
பகத்சிங் என்ற பெயரே வாலிபர்களுக்கு புதிய எழுச்சியை தந்தது. பகத்சிங் பிறந்தபோது ஒரு தாய் தாலாட்டு பாடினார். பகத்சிங்கின் மரணமோ லட்சக்கணக்கான தாய்மார்களை ஒப்பாரி வைக்க வைத்தது.
- வக்கீல் வெ.ஜீவகுமார், தஞ்சாவூர்