

உலகில் உள்ள அனைத்து வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல கடல்களில் இவை காணப்படுகின்றன. இவை உருவத்தில் சிறியது, குட்டையானது. அதே நேரம் பருமனானது. இவ்வகை மீன்கள் பவளப்பாறைகள், கடற்பாசிகள், புற்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சுமார் 100 மீட்டர் (330 அடி) ஆழத்தில் தங்களின் வாழ்விடத்தை அமைத்துக்கொள்கின்றன.
இந்த மீன்கள் 2.5 செ.மீ. முதல் 38 செ.மீ. வரை வளரும். இதன் உடலமைப்பு ஒரு நெறிமுறைக்கு உட்பட்டது அல்ல. ஏனெனில் ஒரு மீனில் செதில்கள் இருக்கும், இன்னொரு வகை மீனில் செதில்கள் இருக்காது. ஒரு மீனில் உடல் சமதளமாக இருக்கும், ஒன்று பிளவுபட்ட முள் போன்ற அமைப்புகளைப் பெற்றிருக்கும். தவளை மீன்களின் குட்டையான உடலில், 18 முதல் 23 வரையான முதுகெலும்புகள் காணப் படுகின்றன. இதன் வாய் பகுதி மேல்நோக்கி அமைந்திருக்கிறது.
பிரகாசமான வெள்ளை, மஞ்சள், சிவப்பு, பச்சை, கருப்பு, பவளப்பாறை சூழலுக்கேற்ற நிறங்களில் இதன் உடல் அமைப்புகள் வண்ண வண்ண புள்ளிகளோடு இருக்கின்றன. இதன் சிறப்பு என்னவென்றால், இதன் உடல் அமைப்பை வைத்து ஒரே இனம் என்று அளவிட முடியாததுதான். ஒரே இனத்திலும் கூட நிற வேறுபாடுகளுடன் பல்வேறு அமைப்புகளில் இந்த தவளை மீன்கள் காணப்படுகின்றன. இவை அதிகமாக நீந்தாது. நகர்வதிலும் பொறுமை காட்டக்கூடியது. ஏனெனில் இவை தன்னுடைய இரைக்காக அப்படி அசைவின்றி இருக்கின்றன. ஈர்ப்பு மிக்க தன்னுடைய நிறம் மிக்க உடலால், இரைகளை ஈர்க்கின்றன. அவை அருகில் வந்ததும் வாயைத் திறந்து, 6 மில்லி வினாடிகள் வேகத்தில் இரையை விழுங்கும். இந்த மீன்களால் தன்னுடைய வாய்ப்பகுதியை 12 மடங்கு அதிகமாக திறக்க முடியும். இதனால் இரைகள் தப்பிக்க வழியில்லை.
பெரும்பாலும் தவளை மீன்களின் இனப்பெருக்க நடத்தைப் பற்றி ஆய்வு செய்யப்படவில்லை. இவை ஒரு நேரத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் முட்டைகள் வரை இடும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.