

பிரீமியம், சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் தனி நபர்களின் விருப்பத்திற்கேற்ப பல சிறப்பம் சங்களைக் கொண்ட இன்டிவிஜுவல் 740 எல்.ஐ.எம். ஸ்போர்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. சென்னை மறைமலை நகரில் உள்ள இந்நிறுவன ஆலையில் இந்த சிறப்பு ஸ்போர்ட் எடிஷன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 7 சீரிஸ் மாடல்களில் இது தனித்துவம் வாய்ந்ததாகத் திகழும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சொகுசு கார்களுக்கே உரித்தான தனித்தன்மையுடனும் தனி நபர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு தன்மைகளை உள்ளடக்கியதாகவும் இது உருவாக்கப் பட்டுள்ளது. நீலம், கிரே உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். லேசர் விளக்கு தொழில்நுட்பத்தில் ஒளிரும் முகப்பு விளக்கு, 20 அங்குல சக்கரம் உள்ளிட்டவை இதன் சிறப்பம் சங்களாகும்.
இதில் இரட்டை சக்தி டர்போ தொழில்நுட்பம் கொண்ட என்ஜின் உள்ளது. 3 லிட்டர் 6 சிலிண்டர் என்ஜின் 340 ஹெச்.பி. திறனையும், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இதை ஸ்டார்ட் செய்து 5.6 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இது 8 ஆட்டோமேடிக் கியர்களைக் கொண்டது. சாலையின் தன்மைக்கேற்ப சஸ்பென்ஷனை மாற்றும் வசதி கொண்டது. பின் இருக்கை பயணிகளின் பொழுதுபோக்கிற்கு வசதியாக 10.2 அங்குல தொடு திரையுடன் கூடிய பிளேயர் உள்ளது. இது கை அசைவின் அடிப்படையில் செயல்படும் வசதியும் கொண்டது. விமானத்தின் காக்பிட் போன்ற வடிவமைப்புடன் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக முன்புற வடிவமைப்பு உள்ளது.
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. இனிய இசையை வழங்க 16 ஸ்பீக்கர்கள் உள்ளன. ஓட்டுநருக்கு உதவும் புதிய சிஸ்டம், லேன் மாறுவதை எச்சரிக்கும் வசதி, பின்புறம் வரும் வாகனம் மோதுவதைப் போல் வந்தால் அதை எச்சரிக்கும் வசதி, டிராபிக் விதிகளை மீறினால் எச்சரிப்பது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. 360 கோணத்தில் சுழலும் கேமரா, பார்க்கிங் அசிஸ்ட் வசதி கொண்டது. குறுகிய மற்றும் சிறிய இடங்களில் பார்க்கிங் செய்வதற்கு கார் தானாகவே செயல்படும்.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய 6 ஏர் பேக்குகள் உள்ளன. வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கை யோடு செயல்படுவதை உணர்த் தும் டைனமிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் (சி.எஸ்.சி.), சி.பி.சி. பிரேக் வசதி, ராஷ கண்ட்ரோல், பக்கவாட்டு பாதிப்பை தவிர்க்கும் வசதி, குழந்தைகளுக்கான ஐசோபிக்ஸ் உள்ளிட்ட பல வசதிகள் கொண்டது.