ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு

ஏர் இந்தியாவின் துணை நிறுவனம் ஒன்றை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு
Published on

நடப்பு நிதி ஆண்டில் (2018-19) பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. சென்ற நிதி ஆண்டுக்கான முதல் இலக்குடன் (ரூ.72,500 கோடி) ஒப்பிடும்போது இது 10 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதி ஆண்டில் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ.15,247 கோடி திரட்டி இருக்கிறது. மிஷ்ரா டட்டூ நிகாம், ரைட்ஸ், இர்கான் மற்றும் கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள், பாரத் 22 ஈ.டி.எப். திட்டம் (இரண்டாவது வெளியீடு) மற்றும் கோல் இந்தியாவின் ஏலமுறை பங்கு விற்பனை வாயிலாக இந்த நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் நிர்வாக உரிமையை கைவிடும் வகையில் மத்திய அரசு பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய தயாராகி வருகிறது. இந்த வகையில் இப்போது ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது ஏர் இந்தியாவின் துணை நிறுவனமாகும்.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நலிவடைந்த நிலையில் இருப்பதால் நிர்வாக உரிமையை கைவிடும் வகையில் அதன் மொத்த பங்குகளையும் (100 சதவீதம்) விற்று விட மத்திய அரசு முயற்சி செய்தது. பின்னர் அந்த நிறுவனத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தை ஒத்திவைக்கவும், அதன் நடைமுறை மூலதன தேவைகளுக்காக போதிய அளவு நிதி உதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

4 துணை நிறுவனங்கள்

இந்த நிலையில் ஏ.ஏ.எஸ்.எல்., எச்.சி.ஐ., ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மற்றும் ஏர் இந்தியா இன்ஜினீயரிங் சர்வீஸ் ஆகிய ஏர் இந்தியாவின் 4 துணை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com