குழந்தை பாக்கியம்: கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தனது முழு கவனத்தையும் மகப்பேறு மீது செலுத்தியாக வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது சவாலும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும்.
குழந்தை பாக்கியம்: கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
Published on

தாய்மை அடைவது பெண்கள் வாழ்க்கையில் பெருமைக்குரிய விஷயம். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கி கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்றெடுப்பது வரை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண் முதலில் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மகப்பேறு மருத்துவரை சந்தித்து கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்ற வகையில் தனது உடல்நிலை இருக்கிறதா? என்பதை பரிசோதித்துக்கொள்வது நல்லது. குறிப்பாக உடல் எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் இருக்கிறதா? நாள்பட்ட நோய் பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா? அப்படி இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும்.

தாய்மைக்கு தயாராகும் பெண் ருசியான உணவுகளை சில காலம் தள்ளிவைத்துவிட்டு ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழு தானிய வகை, உணவுகள், புரதச்சத்து மிக்க உணவுகள் போன்றவற்றை குழந்தை பெற்றெடுக்கும் முன்பும் பின்பும் தவறாமல் சாப்பிட வேண்டும். கால்சியம், இரும்பு சத்து, புரதம் இவை மூன்றும் மகப்பேறுக்கு தயாராகும் பெண்களுக்கு அத்தியாவசியமானவை. அவை அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

கர்ப்பம் தரிக்கும் காலகட்டத்தில் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். அவை உடலுக்கு அழுத்தம் கொடுக்காத எளிமையான பயிற்சிகளாக இருந்தாலே போதுமானது. காலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். ஒருபோதும் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது. தீய பழக்கவழக்கங்களுக்கும் இடம் கொடுத்துவிடக்கூடாது.

பிறக்கும்போது பெண் உடலில் தோராயமாக 1 மில்லியன் கரு முட்டைகள் உள்ளன. பருவமடையும் நேரத்தில், சுமார் 3 லட்சம் கரு முட்டைகள் மட்டுமே எஞ்சி இருக்கும். ஆனாலும் ஒரு பெண்ணின் வாழ்நாளில் 300 முதல் 400 கருமுட்டைகள் மட்டுமே வெளியிடப்படும். அவையே கருவுற்று குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆதலால் மகப்பேறுக்கு ஏதுவான நாட்களை அறிந்திருக்க வேண்டும். கருமுட்டையை வெளியிடும் முன்பாக உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை ஒரு வகை திரவ சுரப்பு உருவாக்கும்.

தாம்பத்திய உறவு என்பது எந்தவித நிர்பந்தங்கள் இல்லாததாக இருக்க வேண்டும்.அந்த சமயத்தில் மகிழ்ச்சியான மன நிலை நிலவ வேண்டும். உறவுக்கு பிறகு மல்லாந்த நிலையில் படுத்திருப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பது பாலியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது அப்படி படுத்திருப்பது உயிரணுவானது கருமுட்டையை தேடி அடைய உதவும்.

கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வு ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். தனது முழு கவனத்தையும் மகப்பேறு மீது செலுத்தியாக வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது சவாலும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையை வளர்க்கும் விஷயத்தில் கணவரை விட மனைவிக்குத்தான் பொறுப்புகளும் அதிகம். ஆதலால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் அத்தகைய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com