செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்பைத் தடுக்க 18 அம்சத் திட்டம்: சீனா அறிவிப்பு

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் தடுக்காமல், அதன் பாதிப்புகளில் இருந்து தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் விதமாக சீனாவில் 18 அம்சத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்பைத் தடுக்க 18 அம்சத் திட்டம்: சீனா அறிவிப்பு.
Published on: 

பீஜிங்,

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலை இழப்பைத் தடுக்கும் விதமாக 18 அம்சத் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

சீனாவில் புதிய 18 அம்சத் திட்டம் அறிவிப்பு

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. மருத்துவம், கல்வி, தொழில்துறை, வங்கிச் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதனால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயமும் உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், தொழில்நுட்ப வளர்ச்சியையும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புப் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்கும் வகையில் சீனா 18 அம்சங்களைக் கொண்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

சீன அரசின் மாநில கவுன்சில் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதலின்படி, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அதனால் ஏற்படும் வேலைவாய்ப்புப் பாதிப்புகளை முன்கூட்டியே மதிப்பிட வேண்டும். வேலை இழக்கும் அபாயம் உள்ள தொழிலாளர்களுக்கு முன்னறிவிப்பு வழங்குவதுடன், மறுபயிற்சி அளித்தல், வேறு பணிகளில் அமர்த்துதல், மாற்று வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தருதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

புதிய வேலைவாய்ப்புகள்

செயற்கை நுண்ணறிவால் வேலைவாய்ப்புகள் குறைவதைத் தடுப்பதுடன், அதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழிலாளர் பற்றாக்குறை உள்ள துறைகள் மற்றும் ஆபத்தான பணிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். அதே நேரத்தில், தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றும் துறைகளில் அதன் பயன்பாட்டை கவனத்துடன் அதிகரிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படும். பட்டதாரிகள், இளைஞர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வேலையில்லாதவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலைக்கான வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சொந்தத் தொழில் தொடங்க உதவி மற்றும் தகுதியுள்ளவர்களுக்கு வேலையில்லாதோர் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.

மேலும் தொழிலாளர்களின் ஊதியம், ஓய்வு, விடுமுறை, பணிப்பாது காப்பு ஆகிய உரிமைகள் உறுதி செய்யப்படும். ஒப்பந்தத் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். ஆட்கள் தேர்வில் செயற்கை நுண்ணறிவு மூலம் பாகுபாடு காட்டுவதையும், தனிநபர் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலை இழப்பைக் கண்காணிக்க ஏற்பாடு

செயற்கை நுண்ணறிவால் எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன, எங்கு வேலை இழப்பு ஏற்படுகிறது என்பதை அரசு தொடர்ந்து கண்காணிக்கும். இதற்காக வேலைவாய்ப்புத் தகவல்களை ஒருங்கிணைத்து, பெரிய அளவில் வேலை இழப்பு ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கும் அமைப்புகளும் உருவாக்கப்படும். சீனாவில் கடந்த 2025-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவுத் துறையின் மதிப்பு 1.2 லட்சம் கோடி யுவானைத் தாண்டியது. அங்கு 6,200-க்கும் மேற்பட்ட செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் செயல்படுகின்றன. மேலும் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு மேல் வருவாய் ஈட்டும் உற்பத்தி நிறுவனங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியைத் தடுக்காமல், அதன் பாதிப்புகளில் இருந்து தொழிலாளர்களின் வேலைவாய்ப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதே இந்த 18 அம்சத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

X