

உலகின் கார்பன் டையாக்சைடு வெளியேற்றம் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால், இந்தப் பெரும் மலைகளில் மூன்றில் இரண்டு பங்கு பனி மலைகள் காணாமல் போய்விடலாம்.
உலகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இந்நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்சியஸ் அளவுக்குள் கட்டுக்குள் வைத்தாலும் கூட குறைந்தது ஒரு பங்கு மலைப் பகுதிகள் இருக்காது என குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
இமயமலை உள்ளிட்ட பனிமலைகள்தான் இப்பகுதியில் உள்ள 8 நாடுகளில் வசிக்கும் 25 கோடி மக்களுக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன.
துருவப்பகுதிகளுக்கு அடுத்து உலகத்தில் அதிகப்படியான பனிக்கட்டிகள் இருப்பது இமயமலை மற்றும் இந்துகுஷ் பகுதிகளில் உள்ள கே2 மற்றும் எவரெஸ்ட் சிகரப்பகுதிகளில்தான்.
ஆனால் இந்த பனி மலை பிராந்தியம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் பாறைகளைக் கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும். ஏனெனில் உலகம் முழுவதும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
புவி வெப்பமயமாதல் மற்றும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக அடுத்த சில பத்தாண்டுகளில் பனி மலைகள் உருகுவது அதிகரிக்கும்.
கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து கங்கை பிராந்தியம் உள்பட கிழக்கில் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரையிலான பெரும் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இது உலகில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள பிராந்தியங்களில் ஒன்று.
இந்த மோசமான காற்று காரணமாக பனி மலைகளின் நிலை மேலும் மோசமடையும். கருமை நிற கார்பன் மற்றும் தூசிகள் பனியின் மேல் படர்வதால் பனிக்கட்டிகள் உருகுவது துரிதமாகிறது.
உலக வெப்பநிலையானது இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்தால் 2100-ல் பனி மலைகளில் பாதி இருக்காது. உலகம் உடனடியாக சுதாரித்து அதிசயிக்கத்தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெப்பநிலை உயர்வை 1.5 செல்சியஸ் அளவுக்குள் குறைத்தாலும்கூட பனி மலைகளில் 36 சதவீதம் காணாமல் போய்விடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பருவ நிலை மாற்றத்தின் இந்த விளைவு இதுவரை நீங்கள் கேள்விப் படாத ஒன்று என்கிறார், இந்த ஆய்வை வழிநடத்திய பிலிப்பஸ் வெஸ்டர்.
ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த விஷயத்திலாவது ஒன்றுபட்டுச் செயல்படுமா?