உலகிற்கு சவால் விடும் பருவ நிலை மாற்றம்

அறிவியலை அறியாத பருவத்தில் நாம் அனைவருமே உலகம் அழியப் போகிறது என்பது குறித்த அச்சுறுத்தல்களை கேட்டிருப்போம். கடைசியாக கடந்த 2000-வது ஆண்டுடன் உலகம் அழியப்போகிறது என்று செய்திகள் பரவின.
உலகிற்கு சவால் விடும் பருவ நிலை மாற்றம்
Published on

அறிவியலை அறிந்த அனைவரும் இந்த செய்திகளை கேட்டு சிரித்துக் கொண்டே கடந்து சென்றனர். ஆனால், இப்போது உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று அறிவியல் வல்லுனர்கள் உண்மையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். காரணம்.... இது மூட நம்பிக்கையின் அடிப்படையிலான கூற்று அல்ல. மாறாக அறிவியலின் அடிப்படையிலான அபாய எச்சரிக்கை. உலகம் ஏன் அழியப் போகிறது? அப்படி என்ன ஆபத்து வந்து விட்டது?பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து தான் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் சாதாரண தொழிலாளி முதல் அமெரிக்க அதிபர் வரை இந்த உலகில் எவரும் அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

புவி வெப்பம் அதிகமாவது என்பது அந்த அளவுக்கு ஆபத்தானது. பருவநிலை மாற்றம் என்பது பலருக்கும் புரியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், இதை புரிந்து கொள்வது மிகவும் எளிதானது. உலகில் தொழில் புரட்சி, நமது வாழ்க்கை நிலை மாற்றம் ஆகியவற்றால்பூமியிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரோப்ளூரோ கார்பன், ஓசோன் வாட்டர் வேபர்(உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் வெளியேறுகின்றன.

புவிவெப்பநிலையை தீர்மானிப்பவை பசுங்குடில் வாயுக்கள் தான். சூரியனில் இருந்து வெளியாகும் வெப்பம் பூமிக்கு வந்து அங்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள வெப்பம் அகச்சிவப்புக் கதிர்களாக எதிரொலிக்கும். அவற்றை வளி மண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்கள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக வெப்பத்தை அவை உறிஞ்சிக் கொள்ளும். அதற்கேற்ற வகையில் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. பசுங்குடில் வாயுக்கள் மட்டும் இல்லாவிட்டால் புவிவெப்பநிலை மைனஸ் 18 டிகிரியாக இருக்கும். பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க, அதிகரிக்க புவி வெப்ப நிலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இது தான் புவிவெப்பமயமாதலின் அடிப்படை. ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு தான் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன் உலகின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாக இருந்தது. இப்போது அது சராசரியாக ஒரு டிகிரி கூடி, 15 டிகிரி செல்சியசாக அதிகரித்துள்ளது. அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். அதை 2030-ம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் கட்டுப்படுத்துவதே உலகின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.(பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற படிம எரிபொருட்களை) வாகனங்களை இயக்குவதற்காகவும், மின்சாரம் தயாரிப்பதற்காகவும், தொழிற்சாலைகளுக்காகவும் பயன்படுத்துவது தான் வெப்பநிலை அதிகரிப்பதற்கான முதன்மை காரணமாகும். இறைச்சி உண்ணுதலின் விளைவாக மீத்தேன் வாயு வெளியாகிறது. வளிமண்டல பசுங்குடில் வாயுக்களில் கார்பன்-டை- ஆக்சைடு (65சதவீதம்) வாயுவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில், அதாவது 17 சதவீதம் அளவுக்கு இருப்பது மீத்தேன் வாயு தான். மேலும் காடுகளை அழிப்பதாலும் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் வெளியாகின்றன. இதனால் இவற்றின் அடர்த்தி அதிகரித்து அதன் பயனாக வெப்பம் அதிகரிக்கிறது. 150 ஆண்டுகளுக்கு முன் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் அடர்த்தி 10 லட்சத்திற்கு 280 ஆக இருந்தது. இது இப்போது 10 லட்சத்திற்கு 415 ஆக அதிகரித்து இருப்பதால்தான் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இதன் விளைவுகளைத் தான் இப்போது நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

உதாரணத்துக்கு ஒன்றை கூறுகிறேன். நமது உடலின் சராசரி வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட் ஆகும். இது 99 ஆகவோ, 100 ஆகவோ அதிகரிக்கும் போது நமக்கு காய்ச்சல் ஏற்படும். இதுவே 102, 103 டிகிரியாக அதிகரிக்கும் போது ஜன்னி ஏற்பட்டு விடும். அதற்கு மேல் சென்றால் உயிரிழப்பு ஏற்படக்கூடும். அதைப்போன்று தான் புவி வெப்பநிலை அதிகரிக்கும் போது பேரழிவுகள் ஏற்படுகின்றன. புவி வெப்பநிலை அதிகரிப்பதன் பாதிப்புகளையும், பேரழிவுகளையும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு தான் மனிதகுலம் அனுபவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் வகையில் இப்போதே பெரும் பாதிப்புகள் தொடங்கிவிட்டன எனவும், அடுத்த 10 ஆண்டுகளில் போர்க்கால நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பூமியில் உயிர்வாழ்க்கை நிரந்தரமாக அழிந்து விடும் என காலநிலை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். இது பூமியின் ஆறாவது உயிரினப்பேரழிவு என கூறுகின்றனர். (ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் பூமியில் விழுந்து ஐந்தாவது உயிரினப்பேரழிவு நிகழ்ந்தது).

காலநிலை வல்லுனர்களின் எச்சரிக்கை உண்மை தான் என்பதை இப்போதே உலகம் முழுவதும் நடந்து வரும் நிகழ்வுகள் காட்டுகின்றன. சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையிலேயே மிகவும் மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பாவில் வரலாற்றில் இல்லாத வெப்பநிலை கடந்த ஜூலை மாதம் பதிவாகியுள்ளது. கடந்த ஜூலை 25-ந் தேதி பாரிஸ் நகரில் வரலாறு காணாத வகையில் 42.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. புவிவெப்பமயமாதல் தமிழகத்தின் பருவநிலையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதற்கு ஊட்டியை அடுத்த அவலாஞ்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த மழையே சாட்சி.

ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி 405 மி.மீ., 8-ந்தேதி 820 மி.மீ, 9-ந் தேதி 911 மி.மீ., 10-ந் தேதி 350 மி.மீ என 4 நாட்களில் 486 மி.மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையே 950 மி.மீ தான். கிட்டத்தட்ட அதே அளவு மழை அடுத்தடுத்து இரு நாட்களில் அவலாஞ்சி என்ற ஒரே ஊரில் பெய்திருக்கிறது. இதற்கு முன் கடலூரில் 76 ஆண்டுகளுக்கு முன் 1943-ம் ஆண்டு கடலூரில் ஒரே நாளில் 570 மி.மீ மழை பெய்தது தான் தமிழகத்தின் அதிகபட்ச மழையாக இருந்தது. அந்த சாதனையை அவலாஞ்சி கடந்த ஆகஸ்டு மாதத்தில் அடுத்தடுத்து இரு நாட்களில் முறியடித்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவில் 1995-ம் ஆண்டு சிரபுஞ்சியில் பெய்த 1563 மி.மீ மழை தான் இந்தியாவில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகும். அதன்பின் மும்பையில் 2005-ம் ஆண்டில் ஒரே நாளில் 944 மி.மீ மழைபெய்தது. இப்போது அவலாஞ்சியில் பெய்திருப்பது இந்தியாவின் மூன்றாவது அதிக அளவு மழை என்பது மட்டுமின்றி, கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஒரே நாளில் பெய்த மிக அதிக மழையாகும். எனினும், இதை சாதனை என கொண்டாட முடியாது. ஏனெனில், இது இனிவரும் ஆபத்தின் அறிகுறி.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு கடந்த 7 ஆண்டுகளில் தானே, வர்தா, ஓகி, கஜா ஆகிய 4 புயல்களை சந்தித்துள்ளது. ஒடிசா மாநிலத்தை பானி புயலும், குஜராத் மாநிலத்தை வாயு புயலும் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இவற்றுக்கு காரணம் புவிவெப்பமடைதலின் தீய விளைவுகள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவற்றில் பானி புயல் கடந்த ஏப்ரல் மாதம் கோடை காலத்தில் ஒடிசாவைத் தாக்கியது. ஒடிசாவை கோடை காலத்தில் புயல் தாக்குவது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடந்த 150 ஆண்டுகளில் ஒடிசாவைத் தாக்கிய மூன்றாவது கோடைப் புயல் பானி ஆகும். இந்தியாவின் காலநிலை தலைகீழாக மாறி வருவதையே இது காட்டுகிறது.

- டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.

இதன் தொடர்ச்சி நாளை(ஞாயிற்றுக் கிழமை) வெளிவரும்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com