

ஒரு மனிதனின் அக இருளை நீக்கி அவனை உயர்வடையச் செய்வது கல்வி. அதனாலேயே காமராஜரை கல்விக் கண் திறந்த காமராஜர் என்போம். அந்த கல்விக் கண்ணை திறக்கக்கூடிய ஆசிரியர்கள் இன்று மதிக்கப்படுகிறார்களா? போற்ற வேண்டாம் அவர்களை சக மனிதர்களாவது பார்க்கிறார்களா என்றால் கேள்விக்குறிதான்?
இந்தியாவில் இன்று மிகப்பெரிய முறைசாரா பிரிவாக ஆசிரியப்பணி மிகுந்து விட்டது என்றால் மிகையாகாது. தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரியை எடுத்துக்கொண்டால் 11 அரசு கல்லூரியைத் தவிர அனைத்தும் தனியார் கல்லூரிகளே. ஏ.ஐ.சி.டி.இ.யும், யு.ஜி.சி.யும் எத்தனை நிபந்தனைகள் , கெடுபிடிகள், தகுதியில் கட்டுப்பாடுகள் விதித்தாலும் ஆசிரியர் தகுதியில் காட்டப்படும் அக்கறை அவர்கள் உரிமையில் காட்டப்படுவதில்லை என்பதே உண்மை.
வசந்த வாசனின் வாழ்வின் வசந்தத்தை போக்கிய ஆசிரியப்பணி, ஆசிரியர்பணியில் இன்றிருக்கும் அவலங்களின் ஒரு சிறு வெளிப்பாடுதான். ஆனால் அதற்காக சட்டம் மூலம் அணுகாமல் உயிரை மாய்த்துக் கொள்வது மிகப் பெரிய தவறு. ஒரு பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக சேர முதுநிலை பட்டப் படிப்பு தேவை. ஆனால் யு. ஜி.சி யின் வரைமுறையின் கீழ் விரிவுரையாளர் பணிக்கே முனைவர் பட்டம் அவசியம். (தனியார் பல்கலைக் கழகம் உட்பட).
ஒரு ஆசிரியர் பொறியியல் துறையாக இருந்தால் 4 வருட இள நிலை மற்றும் 2 வருட முதுநிலை பட்டப்படிப்பும், மேலாண்மைத்துறையாக இருந்தால் 3 அல்லது 4 வருட இளநிலை 2 வருட முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டமும் பெற வேண்டும்.அவருடைய ஆரம்பச் சம்பளம் ஏ.ஐ.சி.டி.இ யின் வழிமுறையின் படி ரூபாய் 45ஆயிரம் ஆனால் ஒரு சில கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகளிலும் ரூபாய் 14ஆயிரம் முதல் 18ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் நிர்ணயிக்கப் படுகிறது. ஏழாவது ஊதியக்கமிஷனின் படி ரூபாய் 67ஆயிரம். இதனை மனதளவில் ஏற்றுக்கொண்டே ஆசிரியர்கள் பணியில் சேருகிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் 10- ம் வகுப்பு முதல் மேல் நிலை படிப்பு வரை உள்ள அத்தனை அசல் சான்றிதழ்களையும் கல்லூரிக்கு ஒப்படைக்க வேண்டும்.
பொதுவாக கல்வித்துறையில் பணியிலிருந்து விலகுபவர்கள் பருவத்தேர்வு முடிவானபிறகு( டிசம்பர் மற்றும் மே மதம்) 3 மாதம் முன்னறிவிப்பு கடிதம் கொடுத்த பின்னரே பணியிலிருந்து விலக முடியும். இல்லாவிட்டால் அவர்கள் சான்றிதழ்களை உரிய பருவம் வரை திரும்பப் பெற முடியாது. மேலும் கல்லூரிக்கு ஏற்ப ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை சம்பளத்தை திரும்பக் கொடுத்தால் அவர்களின் சான்றிதழ்களைப் பெறலாம் என்பதே நடைமுறைவிதி. இது விதிகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் வாழ்வின் தேவைக்காக இதனை ஏற்று பணியாற்றுகிறார்கள்.
அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அவர்களின் பொறுப்புகள் சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் துறையை மாணவர்கள் அதிக அளவு தேர்ந்தெடுக்காததால் இருப்பவர்களையும் வெளியேற்றவேண்டிய அவசியம். அதனால் அடைய முடியாத இலக்கை நிர்ணயித்து அதனை காரணம் காட்டி சிலரும், ஒரு ஆசிரியர் குறைந்தது இத்தனை மாணவர்களை சேர்க்க வேண்டும் என வற்புறுத்தியும் அதனை செயல்படுத்த முடியாமல் சிலரும், விதிமுறைகளை காரணம் காட்டி சிலரும் வெளியேற்றப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
ஒரு விரிவுரையாளர் எத்தனை ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும், அதனை எத்தனை பேர் பரிந்துரைக்கு எடுத்துக்கொண்டுள்ளனர் என கணக்கிட்டு அதன்படியும் அவர்களின் பணிக்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. குறைந்த பட்ச சம்பளத்தில் கட்டுரைக்கு தேவையான செலவுகளைக் கூட செய்ய முடியாமல் பலர் தவிப்பது இன்று நிதர்சனமாகிவிட்டது.
ஆசிரியர்களில் சிலர் பள்ளிகள் அளவில் சாதி பாகுபாடு பார்ப்பதும், பாலியல் தொல்லை தருவதும், செய்முறை தேர்வில் மதிப்பெண் குறைப்பேன் என மிரட்டுவதும் இல்லாமல் இல்லை. ஆனால் இது மொத்த ஆசிரியர் எண்ணிக்கையில் 1 சதவீதத்திற்கும் குறைவே. எப்படி ஆசிரியர்களை தவறாக நடத்துவது தவறோ மாணவர்களை தவறாக நடத்துவதும் தவறு. ஆனால் அதற்கு சட்டத்தின் மூலம் உடனடியாக தீர்வு காணப்படுகிறது என்பது நாம் அன்றாட செய்திகளின் மூலம் காண முடிகிறது.
வருங்கால வைப்பு நிதி, ஊழியர் காப்பீடு, மருத்துவ விடுப்பு, சம்பளத்துடன் கூடிய பிரசவ விடுப்பு எதுவும் இல்லாமல் குறைந்த அளவு ஆசிரியர்கள், அதிக வகுப்புகள், குறைந்த சம்பளம் இதுவே உண்மை நிலை. இதற்கிடையில் மாணவர்களின் முன்னேற்றமும் அவர்கள் மீதான ஆசிரியர்களின் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளதையும் புறந்தள்ளுவதற்கில்லை. இந்த நிலை நீடிப்பது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். இது கல்லுரிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் இதே நிலை தான். எத்தனை இன்னல்களுக்கு இடையேயும் ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்வு சிறக்க கடமையை செய்வார்கள். ஆனால் அவர்களின் மவுன அழுகுரல்கள், வேதனைகள் அதிகமானால் அது இந்த சமுதாயத்தையே பாதிக்கும்.
கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களின் கடமையில் காட்டுகிற கண்டிப்பு உரிமையிலும், நலனிலும் துளியேனும் கவனம் செலுத்தினால் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் என்று மூன்று கோணங்களிலும் வெற்றி கிட்டும். அதுவே சமுதாயத்தின் வெற்றி. கல்லூரிகள் கனவுகளை காவு வாங்காமல் கனவுகளை நினைவாக்க கை கொடுத்தால் ஆசிரியர்கள் தோள் கொடுத்து சமுதாயத்தை உயர்த்துவார்கள் என்பது திண்ணம்.
பேராசிரியை ஆர். காயத்ரி சுரேஷ்