40 வயதில் பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள்

40 வயதை எட்டும் பெண்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை உட்கொள்ளும் விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாவிட்டால் பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
40 வயதில் பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள்
Published on

குறிப்பாக உடல் சோர்வு, எலும்பு அடர்த்தி குறைவது, மூட்டு வலி போன்ற பாதிப்புகளால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். அதனை தவிர்ப்பதற்கு உடலுக்கு போதுமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படும். 20 வயதில் மேற்கொண்ட உற்சாகமான செயல்பாடுகளை 40 வயதுக்கு பிறகு அதே இளமை துடிப்புடன் தொடர முடியாது. ஒவ்வொருவரின் வயது, உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும்.

40 வயதுக்கு பிறகு பெண்களின் உடலில் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும். ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி குறைந்து வருவது ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றத்தை உண்டாக்கும். எலும்புகள் பல வீனமடைய கூடும். உடல் நலனில் போதிய கவனம் செலுத்தாவிட்டால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பும் அதிகம். அதனை தவிர்க்க பெண்கள் தினமும் உட்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துக்கள் பற்றிய பட்டியல் இது.

1. வைட்டமின் பி12:

40 வயதை எட்டும் பெண்கள் உணவு பட்டியலில் சேர்க்க வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்களுள் பி12 முக்கியமானதாகும். இது ரத்த ஓட்டம் மற்றும் மூளையின் செயல்பாட்டை பாதுகாக்கக்கூடியது. முட்டை, இறைச்சி வகைகள், மீன், பால் பொருட்கள் உள்பட பல்வேறு உணவு வகைகளில் இருந்து வைட்டமின் பி 12 ஊட்டச்சத்தை பெறலாம். இருப்பினும் வயது அதிகரிக்கும் போது உட்கொள்ளும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறைந்துவிடும். அதனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் பி12 குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்களை உட்கொள்ளலாம்.

2. கால்சியம்:

பெண்களுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று, கால்சியம். இதயம், நரம்பு மண்டலம், தசையின் செயல்திறன் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பேணுவதற்கு இது முக்கியமானது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி கால்சியம் அதிகம் உட்கொள்வது இதய நோய்க்கு வித்திடும். இருப்பினும் வயது அதிகரிக்கும்போது எலும்புகள் பலவீனமடைய தொடங்கிவிடும். உடலில் கால்சியம் அளவும் குறைந்து போய் விடும். அதனை ஈடு செய்வதற்கு கூடுதல் கால்சியம் தேவைப்படும். அதனால் கால்சியம் சத்து கொண்ட உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவரின் பரிந்துரைப்படி கால்சியம் மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

3. மெக்னீசியம்:

உடலின் அன்றாட செயல் முறைகளுக்கு மெக்னீசியம் மிக முக்கியமானது. புரதங்களின் உற்பத்தி மற்றும் வயிற்று அமிலத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கும், செரிமானம் மற்றும் நரம்பு களின் செயல்பாடுகளை தூண்டுவதற்கும், ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதற்கும் மெக்னீசியம் உதவும். உடலில் மெக்னீசியம் அளவு குறைந்து கொண்டிருப்பது மன நிலையை பாதிக்கும். தூக்கத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும். பருப்பு வகைகள், பச்சை இலைக் காய்கறிகள், நட்ஸ் வகைகள், முழு தானியங்கள் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் காணப்படுகிறது. மீன், கோழி போன்ற இறைச்சி வகைகள், பாதாம், வேர்க்கடலை, முந்திரி, பூசணி விதைகள், வேர்க்கடலை, வெண்ணெய், சாதாரண பீன்ஸ், சோயா பீன்ஸ், சோயா பால், கீரை, சாக்லெட், பால், தயிர் போன்றவற்றை உட்கொள்வதன் மூலமும் உடலுக்கு தேவையான மெக்னீசியத்தை பெறலாம். உடலில் மெக்னீசியம் குறைபாடு இருப்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மெக்னீசியம் மாத்திரைகளை உட்கொள்ளலாம்.

4. வைட்டமின் டி:

40 வயதுக்கு பிறகு உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய், இதய நோய், மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உண்ணும் உணவில் இருந்து உடல், போதுமான அளவு கால்சியத்தை உறிஞ்சுவதும் அவசியம். அதில் குறைபாடு ஏற்பட்டாலும் வைட்டமின் டியின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகும். மீன், பால் பொருட்கள், தானியங்கள் போன்றவை வைட்டமின் டி நிரம்பப் பெற்றவை. 40 வயதுக்கு பிறகு உடலில் வைட்டமின் டி தேவையை பூர்த்தி செய்வதற்கு கூடுதல் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியமானது.

5. ஒமேகா -3 கொழுப்பு

அமிலங்கள்:

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை. இதய நோய், மூட்டு வலி போன்ற பாதிப்புகள் நேராமல் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக செயல்படக்கூடியவை.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, ஒமேகா - 3 கொழுப்பையும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைப்பதற்கும், அறிவாற்றலை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒமேகா-3 உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தலாம்.

பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறன் குறையும் என்பதால் அதனை ஈடு செய்வதற்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கள் அவசியம். அதுதான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த வழியும் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com