குளிர்ச்சி.. இனிப்பு.. ஆபத்து..

பாட்டில்களிலும், டின்களிலும் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் கலர்கலரான குளிர்பானங்கள் மக்களை வெகுவாக கவர்கிறது. அதனால் அவைகளை வாங்கி பருக அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
குளிர்ச்சி.. இனிப்பு.. ஆபத்து..
Published on

அதில் இருக்கும் இனிப்புச் சுவையும், குளிரும் அதை பருகும்போது சுவையை தரத்தான் செய்யும். ஆனால் பெரும்பாலானவர்களின் உடலில் இருக்கும் நோய்த்தன்மையை அதிகரித்து, அவர்களின் ஆரோக்கியத்தை சீர்கெடுப்பதில் இந்த குளிர்பானங்கள்தான் பெரும்பங்கு வகிக்கிறது.

கடைகளில் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் கார்பனேட்டட் சாப்ட் டிரிக்ஸ் குளிர்பான வகைகள் தாகத்தையோ, சோர்வையோ விரட்டும் சக்திகொண்டவை அல்ல. அவைகளை தொடர்ந்து பருகிவந்தால் ஈரல் நோய்களும், உடல் பருமன் பிரச்சினைகளும் தோன்றும். கார்பனேட்டட் வகை பானங்களில் இனிப்பும், கலோரியும் அதிகமாக இருக்கிறது. அவை ஆரோக்கிய சீர்குலைவுக்கு காரணமாக இருக்கின்றன.

சாதாரண அளவுகொண்ட ஒரு பாட்டில் குளிர்பானத்தில் கிட்டத்தட்ட பத்து தேக்கரண்டி அளவுக்கு சர்க்கரை அடங்கியிருக்கிறது. முழு ஆரோக்கியமான ஒருவர் தினமும் ஐந்து தேக்கரண்டி சர்க்கரையே பயன்படுத்தவேண்டும். அதனால் குளிர்பானங்களை பருகுகிறவர்களின் உடலில் தேவைக்கு அதிகமான சர்க்கரை விரைவாக சேர்ந்துவிடுகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் குளிர்பானம் பருகிவிட்டால் அவர்கள் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

ஒரு சிறிய டின் குளிர்பானத்தில் சுமார் 150 கலோரி சக்தி இருக்கிறது. உடலில் தேவைக்கு அதிகமான கலோரி சேரும்போது, அது கொழுப்பாக மாறி உடலிலே தங்கிவிடும். அது நான் ஆல்கஹாலிக் பாற்றி லிவர் என்ற ஈரல் பாதிப்பை உருவாக்கும். குளிர்பானங்களில் காபின் அடங்கியிருக்கிறது. அது அதிகமாக சிறுநீரை உருவாக்கும் சக்தி கொண்டது. குடித்த உடன் அது சக்தியை தருவது போன்று தோன்றினாலும் அதில் இருக்கும் தண்ணீர், சோடியம் போன்ற தாதுக்கள் சிறுநீர் வழியாக சிறிது நேரத்திலே வெளியேறிவிடும். சிறுநீர் கழித்ததும் அதிக தாகமும், சோர்வும் தோன்றும்.

குளிர்பானம் அடிக்கடி பருகுகிறவர்களுக்கு வயிற்று உப்புசம், வாயுத்தொந்தரவு, பசியின்மை, வயிற்றுவலி போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பானம் இரைப்பையை அடையும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடுதான் இந்த வயிற்று தொந்தரவுகளுக்கு காரணம். அசிடிட்டி, புளித்த ஏப்பம் போன்ற தொந்தரவு இருப்பவர்கள் குளிர்பானங்களை பருகக்கூடாது. குளிர்பானம் பற்களையும், எலும்பையும் பாதிக்கும். சிறுநீரகத்தில் கற்களையும் உருவாக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com