போக்குவரத்து சிக்னலும் இல்லை; போக்குவரத்தில் சிக்கலும் இல்லை: எந்த நாட்டில் தெரியுமா?

அந்த சின்னஞ்சிறிய நாடு இந்தியாவுக்கு அருகேதான் இருக்கிறது.
போக்குவரத்து சிக்னலும் இல்லை; போக்குவரத்தில் சிக்கலும் இல்லை: எந்த நாட்டில் தெரியுமா?
Published on

திம்பு,

இந்தியாவுக்கு அருகே உள்ள ஒரு நாட்டில் போக்குவரத்து சிக்னலும் இல்லை. அதே நேரத்தில் போக்குவரத்தில் சிக்கலும் இல்லை. அந்த நாட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

உலக மக்கள்தொகை எவ்வளவு தெரியுமா?

7 கண்டங்களைக் கொண்ட பூமிப் பந்தில், மொத்தம் 195 நாடுகள் இருக்கின்றன. உலக மக்கள்தொகையான 830 கோடியில், அதிகபட்சமாக இந்தியாவில் 147 கோடி பேர் வசிக்கின்றனர். 141 கோடி மக்கள்தொகையுடன் சீனா 2-வது இடத்தையும், 34.9 கோடி மக்கள்தொகையுடன் அமெரிக்கா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் 40 கோடி வாகனங்கள் இருக்கின்றன. இதில், 70 சதவீதம் இருசக்கர வாகனங்கள்தான். என்றாலும், மாவட்ட தலைநகரங்கள், மாநில தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

சிக்னல் இயங்காவிட்டால் இடியாப்ப சிக்கல்

அதுவும் பணிக்கு செல்லும் காலை நேரமும், பணி முடிந்து திரும்பும் மாலை நேரமும் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகவே இருக்கிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த சாலை சந்திப்புகளில் ஆங்காங்கே சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி முறையில் இயங்கும் இந்த சிக்னல்கள் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சற்று எளிதாக்கி வருகின்றன.

அதே நேரத்தில், சிக்னல் இயங்காமல் போனால், அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் உருவாகி இடியாப்ப சிக்கலே ஏற்பட்டுவிடுகிறது. போக்குவரத்து சீராக பல மணி நேரமாகிவிடுகிறது.

சின்னஞ்சிறிய நாடு பூட்டான்

ஆனால், உலகிலேயே ஒரேயொரு நாட்டில் மட்டும் போக்குவரத்து சிக்னல் என்பதே இல்லை. அதே நேரத்தில் போக்குவரத்திலும் சிக்கல் ஏற்படுவதில்லை. அந்த நாடு எங்கே இருக்கிறது என்று ஆச்சரியமாக கேட்கிறீர்களா?. அந்த சின்னஞ்சிறிய நாடு இந்தியாவுக்கு அருகேதான் இருக்கிறது.

அதுதான் பூட்டான். இந்தியாவுக்கு மேலே நேபாளத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த நாட்டின் மக்கள்தொகை சுமார் 8 லட்சம் தான். தலைநகர் திம்புவில் 1 லட்சத்து 41 ஆயிரம் பேர்தான் வசிக்கின்றனர்.

போக்குவரத்து சிக்னல்களே இல்லை

பூட்டானில் உள்ள எந்த சாலையிலும் போக்குவரத்து சிக்னல்கள் என்பதே இல்லை. அதே நேரத்தில், வாகனங்களும் தங்குதடையில்லாமல் எளிதாக சாலைகளில் பயணிக்கின்றன.

அதன் தலைநகர் திம்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில், பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கைகளால் காட்டும் சைகைகள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட சாலைகள்

தலைநகர் திம்புவில் 1990-ம் ஆண்டு போக்குவரத்து சிக்னல்களை அமைத்தபோதும் அதற்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த காரணத்தால், அவை நீக்கப்பட்டு மீண்டும் கைமுறை சைகைகள் மூலம் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது.

பூட்டானில் ஒவ்வொரு சாலைகளும், சாலை சந்திப்புக்களை கொண்ட வட்டச் சாலைகளும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நன்கு திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கையாகவே மலைப்பாங்கான நாடு என்பதால், வாகனங்கள் மெதுவாகவே செல்கின்றன. மேலும், வாகன ஓட்டிகளும் அவசரம் காட்டாமல், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றி வருகின்றனர்.

சிக்னலும் இல்லை.. சிக்கலும் இல்லை

பாதசாரிகள் கடக்கும் இடங்களில், மெதுவாகவே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. பாதசாரிகள் சாலையை கடக்கும்போது வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தேவையில்லாமல் ஹாரன் ஒலிக்கப்படுவதும் இல்லை.

இப்படி, போக்குவரத்து ஒழுங்காக நடைபெறும்போது, பூட்டானில் எதற்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் தேவை? என்ற கேள்வி எழுகிறது. எனவேதான், பூட்டானில் சிக்னலும் இல்லை, அதனால் சிக்கலும் இல்லை

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com