வவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதருக்கு கொரோனா பரவியது- உலக சுகாதார நிறுவனம்

வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வவ்வாலில் இருந்து விலங்கு மூலமாக மனிதருக்கு கொரோனா பரவியது- உலக சுகாதார நிறுவனம்
Published on

பீஜிங்,

சீனாவில் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தாக்கம் இன்னும் முடியவில்லை. உகான் நகரில் உள்ள கடல் உணவு சந்தையில் இருந்து கொரோனா பரவியதாக கருதப்படுகிறது. அதே சமயத்தில், கொரோனா வைரசை சீனா தனது உகான் பரிசோதனை கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது அங்கிருந்து கசிந்திருக்கலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

எனவே, கொரோனா எப்படி தோன்றியது என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவினர் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சீனாவுக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டனர். சீன விஞ்ஞானிகளுடன் சேர்ந்து விசாரணையில் இறங்கினர். உணவு சந்தை, ஆய்வுக்கூடம் போன்ற இடங்களுக்கும் நேரில் சென்றனர்.

இதுதொடர்பான உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. சில நாட்களில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இந்தநிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அதன் அறிக்கை, ஜெனீவாவில் உள்ள ஒரு நாட்டின் தூதரக அதிகாரி மூலம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. அதை செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டது.

உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இணைந்து தயாரித்த அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கொரோனா பரவியதற்கு 4 சூழ்நிலைகளை சொல்லலாம். முதலாவது, வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவி இருக்கலாம். இதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இரண்டாவது, வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவி இருக்கலாம். இதற்கு வாய்ப்பு இருக்கிறது.மூன்றாவது, குளிரூட்டப்பட்ட உணவு பொருட்கள் வழியாக பரவி இருக்க சாத்தியம் உள்ளது. ஆனால், அப்படி நடந்திருக்காது. நான்காவது, பரிசோதனை கூடத்தில் இருந்து கசியும் சூழ்நிலை. ஆனால், அதற்கு சிறிதுகூட சாத்தியம் இல்லை. கொரோனாவை உண்டாக்கும் வைரஸ் போன்ற ஒரு வைரஸ், வவ்வாலிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்ற வைரஸ்கள், எறும்புத்தின்னி, கீரி, பூனைகள் ஆகியவற்றிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகர சந்தையில் இருந்துதான் கொரோனா பரவியதா என்பது குறித்து இந்த அறிக்கையில் எதுவும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. அறிக்கை சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் உலக சுகாதார நிறுவன நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com