

புதுடெல்லி
நம் நாட்டில், ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 27 லட்சம் டன்னாக குறைந்து இருக்கிறது. ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா போன்ற நிறுவனங்களின் உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணமாகும்.
ஓ.என்.ஜி.சி.
உள்நாட்டில் உற்பத்தி குறைவாக இருப்பதால் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது. பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈட்டுபட்டு வருகின்றன.
நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதத்தில் (ஏப்ரல்), நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 27 லட்சம் டன்னாக உள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 29 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, உற்பத்தி 6.9 சதவீதம் குறைந்துள்ளது.
இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி 4.9 சதவீதம் சரிந்து 17 லட்சம் டன்னாக இருக்கிறது. ஆயில் இந்தியாவின் உற்பத்தி 3.3 சதவீதம் குறைந்து 2.70 லட்சம் டன்னாக உள்ளது. தனியார் நிறுவனங்களின் உற்பத்தி ஒட்டுமொத்த அளவில் 7.60 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 12 சதவீதம் குறைவாகும்.
கடந்த நிதி ஆண்டில் (2018-19) 3.70 கோடி டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து இருந்தது. ஆனால் அந்த ஆண்டில் எண்ணெய் உற்பத்தி 3.42 கோடி டன்னாக இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 4 சதவீதம் குறைவாகும்.
இதில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உற்பத்தி (2.23 கோடி டன்னில் இருந்து) 2.10 கோடி டன்னாக குறைந்துள்ளது. அடுத்து ஆயில் இந்தியாவின் உற்பத்தி 2.5 சதவீதம் சரிவடைந்து 33 லட்சம் டன்னாக இருக்கிறது. தனியார் நிறுவனங்களின் ஒட்டுமொத்த எண்ணெய் உற்பத்தி 2 சதவீதம் குறைந்து 98 லட்சம் டன்னாக உள்ளது.
மத்திய அரசு இலக்கு
2022-ஆம் ஆண்டிற்குள் நமது மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.