பனைமரங்கள் வளர்ப்போம்...! பேரிடர் தவிர்ப்போம்...!

புயல் கடந்து சென்ற பாதையில் இருந்த பனை மரங்கள் விழுந்ததாக தகவல்கள் வரவில்லை.
பனைமரங்கள் வளர்ப்போம்...! பேரிடர் தவிர்ப்போம்...!
Published on

சமீபத்தில் உண்டான கஜாப் புயல், தமிழகத்தில் மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதை விட மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது என்பதே கண்கூடு. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, வாழை மரங்கள் மொத்தமாக சாய்ந்து விழுந்துள்ளது, 46 லட்சம் தென்னை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. ஆனால், புயல் கடந்து சென்ற பாதையில் இருந்த பனை மரங்கள் விழுந்ததாக தகவல்கள் வரவில்லை.

இன்று அப்பகுதிக்கு சென்றாலும் பனை மரங்கள் தலை நிமிர்ந்து நிற்பதையும், அதை ஒட்டியுள்ள இடங்கள் பெருமளவிலான பாதிப்பில் இருந்து தப்பி இருப்பதையும் காணலாம். பனை மரங்கள் புயலுக்கும் சாயாத வலிமை கொண்டவை என்று சொல்வதை விட, புயலில் இருந்து தன்னைச் சுற்றியுள்ள இயற்கை வளங்களை பாதுகாத்திடும் சக்தி கொண்டவை என்று சொல்லலாம்.

இத்தகைய நன்மையை வழங்கிடும் காரணத்தினால் தான் பனை மரத்தை பூலோகத்தின் கற்பகத் தரு என்று சொல்கிறோம். தமிழ்நாட்டின் பல்வேறு அடையாளங்களில் மரத்திற்குரிய அடையாளமாக பனை மரத்தையே குறிப்பிடுகிறோம். வான சாஸ்திரம் முதல் மருத்துவ சாஸ்திரம் வரை தெரிந்திருந்த நம் முன்னோர், கல் தோன்றி மண் தோன்றா காலம் முன்னே தோன்றிய காலத்தவர் என்ற பெருமைக்குரிய நம் முன்னோர் பனை மரம் வளர்ப்பதில் அதிகப்படியான கவனம் செலுத்தியுள்ளனர். காரணம், பனை மரம் எத்தகைய சூறைக்காற்றிலும் வீழ்ந்திடாத தன்மை கொண்டவை என்பதை விட, புயல் காற்றுகளில் உண்டாகும் பெரும் சூறாவளிக் காற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்திடக் கூடியவை என்றும் உறுதியாக சொல்லலாம்.

காற்றின் வேகத்தை தடுத்து, காற்றினை மேலே அனுப்பிவிடக் கூடிய வல்லமை பெற்றவைகளாக பனை மரங்கள் விளங்குகின்றன, இந்த காரணத்திற்காகவே நமது முன்னோர்கள் கடற்கரை ஓரங்களில் பனை மரங்களை வளர்த்து வந்துள்ளனர். நிலத்திற்கு வரும் புயல் காற்றை தடுத்து மேலே அனுப்பி வைக்கும் சக்தி படைத்தவைகளாக பனை மரங்கள் இருப்பதால், காற்றினால் உண்டாகும் அழிவிலிருந்து வாழை, முருங்கை, மின் கம்பங்கள் போன்றவை தப்பித்துக் கொள்ளும். எல்லாவற்றுக்கும் மேலாக, காற்று மாசையும் பனை மரத்தினால் மட்டுமே கட்டுப்படுத்திட முடியும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, புயலில் பாதிக்கப்பட்டவர்களை நாம் பாதுகாக்க முயற்சிக்கும் போதே, வரும் காலங்களில் புயலின் அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நம்மால் முடிந்த வரையில் குளக்கரைகளில், ஓடைகளின் ஓரத்தில், ஆற்றின் கரைகளில், ஏரிகளின் கரைகளில் என்று எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பனை மரங்களை நட்டு வளர்ப்போம். நமது சந்ததிகளை புயல் ஆபத்திலிருந்து பாதுகாப்போம்...

பனை மரங்கள் ஆணி வேர்களைக் கொண்டவையே அன்றி, சல்லி வேர்கள் கொண்டவை அல்ல, பனை மரத்தினால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு கூட எந்த வித பாதிப்பும் ஏற்படாது. பேரிடரில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும், இயற்கை செல்வங்களை பாதுகாக்கவும் ஊர்தோறும் பனை மரங்கள் நடுவோம். அழிவில்லா தமிழகம் காண்போம். புயலினால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு மனித நேயத்துடன் உதவுங்கள்.

பாரதி சுகுமாரன், சமூக ஆர்வலர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com