

27 வயதாகும் இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள கரிக்ககோம் பகுதியை சேர்ந்தவர். இவரது தந்தை பிரேம் குமார் கட்டுமான தொழிலாளி. 8-ம் வகுப்பு படித்தபோது அஸ்வதிக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கிறது. அதனை லட்சியமாகக்கொண்டு படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்து வந் திருக்கிறார்.
குடும்ப சூழ்நிலை விரும்பிய படிப்பை தேர்ந்தெடுக்க அனுமதிக்கவில்லை. 12-ம் வகுப்பு படித்ததும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். என்ஜினீயரிங் படிப்பின் இறுதி ஆண்டிலேயே கேம்பஸ் இண்டர்வியூ மூலம் அவருக்கு வேலையும் கிடைத்துவிட்டது. 2015-ம் ஆண்டு கொச்சியில் உள்ள நிறுவனத்தில் நல்ல வேலையில் சேர்ந்திருக்கிறார். ஐ.டி. வாழ்க்கை சூழலுக்கு திரும்பினாலும், மனமோ ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நோக்கி பயணிக்க வைத்திருக்கிறது.
வேலையை தொடர்ந்து கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகி இருக்கிறார். சம்பள பணத்தை படிப்புக்காக செலவிட சேமித்திருக்கிறார். ஒருகட்டத்தில் வேலையை கைவிட்டால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு முழுமூச்சாக தயாராக முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். 2017-ம் ஆண்டு வேலையை ராஜினாமா செய்தவர், முழுநேரமாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு ஆயத்தமாகி இருக்கிறார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் மூன்று முறை தோல்வியை சந்தித்தவர், சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் 481-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். மூன்று முறையும் முதன் நிலை தேர்விலேயே தோல்வியை தழுவி இருக்கிறார். மனம் தளராமல் ஐ.ஏ.எஸ். கனவை சுமந்தபடி தீவிர பயிற்சி எடுத்தவர் இந்த முறை சிறப்பாக தேர்வெழுதி வெற்றி பெற்றுவிட்டார். ஆனாலும் ஐ.ஏ.எஸ். ஆக முடியுமா? என்ற கவலை அவரிடம் இருக்கிறது.
இது சிவில் சர்வீசஸ் தேர்வில் எனது நான்காவது முயற்சி. கடந்த மூன்று முறை நான் ஆரம்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெறவில்லை. கொஞ்சம் கவலையாக இருந்தது. தேர்வில் வெற்றிபெற, சுயமாக தேர்வு எழுதி பயிற்சி பெற்றேன். அதற்கு பலன் கிடைத்துள்ளது.
தேர்வில் தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி அடை கிறேன், இருப்பினும் ரேங்கில் பின் தங்கி இருப்பதால் ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் சேவை) பதவிதான் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் என் கனவு என்பதால், வரவிருக்கும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு இப்போதே தயாராக தொடங்கிவிட்டேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்.
அஸ்வதியின் தந்தை பிரேம்குமார் கூறுகையில், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான படிப்பு கடினமாக இருந்ததால் ரொம்பவே சிரமப்பட்டாள். ஆனாலும் அர்ப்பணிப்போடு படித்தாள். தொடக்கப்பள்ளியில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்குகிறாள். அதனால்தான் அவளால் சிறப்பாக தேர்வெழுத முடிந்தது. என் மகள் என்னை பெருமைப்படுத்திவிட்டாள் என்கிறார்.