தினம் ஒரு தகவல் : மூட்டுத் தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?

இளமையில் தன்னைப்பற்றி கவலைப்பட நேரமில்லாமல் குடும்பம், வேலை என்று ஓடி ஓடி உழைக்கும் பெண்களையே பெரும்பாலும் வயதான காலத்தில் தாக்குகிறது மூட்டுவலி. அதுவும் முதுமையில் மூட்டுவலி என்பது மிகவும் கொடுமை. மூட்டுவலி ஏன் வருகிறது.
தினம் ஒரு தகவல் : மூட்டுத் தேய்மானம் எதனால் ஏற்படுகிறது?
Published on

மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைதல், ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியில் ஏற்படும் மாற்றத்தின் மூலம் வரும் வாதம் போன்ற காரணங்களாலும் மூட்டு தேய்மானம் அடைந்து, அதன் காரணமாக மூட்டுவலி ஏற்படும். இந்தியப் பெண்களை அதிகம் பாதிப்பது வயது காரணமாக ஏற்படும் முழங்கால் மூட்டுத் தேய்மானம் தான்.

முதல் பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு அவர்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் உடல் எடை அதிகரிக்கிறது. அதீத எடையால் முழங்கால் மூட்டுக்குச் செல்லும் பாரம் அதிகரித்து, எலும்புத் தேய்மானம் ஏற்பட காரணமாகிறது.

பொதுவாக, மாதவிடாய் காலங்களில் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், ஹார்மோன் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும் கால்சியத்தை உடலில் அதிகரிக்கிறது. ஆனால் பெண்கள் 45 வயதை கடக்கும் போது, மாதவிலக்கு நின்றுவிடுவதால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு தடைபடுகிறது. அதனால் உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆஸ்ட்ரியோபெரோசிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைதல், மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகிறது.

மூட்டில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மூட்டெலும்பு வளைந்து போனால் செயற்கை மூட்டு பொருத்துவார்கள். இது உடலுக்கு எந்த ஒவ்வாமையையும் ஏற்படுத்தாது. இந்த வகையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நீண்ட வருடங்கள் பலன் தரும். உடல் உயரத்துக்கு ஏற்ற மிகச் சரியான எடையில் இருத்தல், உடலில் கொழுப்புகள் சேராமல் இருக்க நடைபயிற்சி மேற்கொள்ளுதல் ஆகியவற்றோடு மாதம் ஒருமுறை பிஎம்ஐ (பாடி மாஸ் இண்டக்ஸ்) அளவை கண்காணிக்க வேண்டும்.

ஊட்டச்சத்து மிகுந்த சிறு தானியங்கள், பருப்பு, நட்ஸ், பழங்கள், வைட்டமின் டி நிறைந்த உணவுகள், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கால்சியம் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பக் கட்ட மூட்டு தேய்மானத்தை மட்டும் உணவு பழக்க வழக்கத்தால் சரிப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கியமான வாழ்வை குடும்பத்தாருக்கு அளிக்கும் வயதான பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டால் இது போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வை தொடரலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com