

இன்டர்நெட் வசதி என்பது நமது வளர்ச்சிக்குத்தான். ஆனால் அதற்கு இணையாக, இந்த வசதியை பயன்படுத்தி சில கில்லாடி வேலைகளும் நடக்கத்தான் செய்கிறது. அதாவது ஒரு புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படும் போதே, அதற்கு எதிரான தொழில்நுட்பத்தையும் கண்டுபிடித்து விடுகின்றனர். இவர்களை தொழில்நுட்ப கில்லாடிகள் என்பதா, இணையதள குற்றவாளிகள் என்பதா என்று குழம்பி போய் நிற்கிறது உலகம். மனிதன் அன்றாட வேலைகளை எளிமைப்படுத்தும் எல்லா தொழில்நுட்பங்களிலும் கைவரிசை காட்டி விடுகின்றனர், இந்த இணையதள குற்றவாளிகள்.
இவர்களால் 2013-வரை திருடப்பட்டுள்ள தொகை ரூ.6,000 கோடி என்கிறது ஒரு அறிக்கை. உலகம் முழுவதிலும் உள்ள முக்கியமான 100 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணக்குகளுக்குள் நுழைந்து தொகையை திருடியுள்ளனர். இணையதள குற்றவாளிகள் கும்பல்களாக வந்து பணத்தை கொள்ளையடிப்பது இல்லை. ஒரு கணினி போதும். முதலில் ஒரு குறிப்பிட்ட வங்கியை தேர்ந்தெடுத்து, அந்த வங்கியின் செயல்பாடுகளை கண்காணிக்கின்றனர். அந்த வங்கியின் கணினிக்குள் வைரஸ்களை புகவைத்து, அது செயல்படும் விதத்தை தெரிந்து கொள்கின்றனர்.
வங்கிச் சேவைகளில் பெயர்களை மாற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல்களை திருடுகின்றனர். இப்படி பொருளாதார குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களில், ரஷியாவிலிருந்து 42 சதவீதம் வைரஸ் அப்லோடு செய்கிறார்கள். இதற்கடுத்து 13 சதவீதம் ஜெர்மனியிலிருந்தும், 10 சதவீதம் அமெரிக்காவிலிருந்தும் ஏற்றம் செய்கின்றனர். இதற்கடுத்து பல நாடுகளிலிருந்தும் வைரஸ்கள் ஏற்றம் செய்யப்படுகின்றன. முக்கியமாக 30 நாடுகளில் இயங்கும் 100-க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தான் இவர்களது இலக்கு. இந்த நிறுவனங்களுக்கு என்று சுமார் 300-க்கும் மேற்பட்ட ஐ,பி, முகவரிகளை இந்த பொருளாதார குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா, பிரேசில், கனடா, ஸ்பெயின், ஐஸ்லாந்து, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, உக்ரேன், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, தைவான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட முப்பது நாடுகள் இந்த பொருளாதார குற்றவாளிகளின் பட்டியலில் உள்ளன.
ஒரு வங்கியில் இரண்டு முதல் மூன்று மாதங்களில் தங்களது கைவரிசையை காட்டி விடுகின்றனர். அதற்கடுத்து அடுத்த நாடு, அடுத்த வங்கி என திட்டம் தீட்டுகின்றனர். பல வழிகளில் பொருளாதார குற்றங்கள் நடைபெற்று வந்தாலும், ஆன்லைன் சேவைகளில் உள்நுழைவதன் மூலமாகவும், ஏ.டி.எம். மையம் வழியாகவும்தான் அதிக கொள்ளை நடந்திருக்கிறது. ஏ.டி.எம் மற்றும் வங்கியின் முன்னாள் ஊழியர்கள் மூலமாக இணையதள குற்றவாளிகள் தகவல்களை பெறுவதாக அறிக்கை கூறுகிறது.