தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்

திமிங்கலம் மீன் இனத்தைச் சேர்ந்ததல்ல. அது குட்டிப்போட்டு பால் கொடுக்கும் விலங்குகள் இனத்தை சேர்ந்தது.
தினம் ஒரு தகவல் : திமிங்கலங்களை அறிவோம்
Published on

உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது நீரில் வாழும் திமிங்கலம். திமிங்கல வகைகளில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது.

இதன் நீளம் 36 மீட்டருக்கு மேல் இருக்கும். எடை 162 டன்னுக்கு மேல். இது சுமார் 40 யானைகளின் எடைக்கு சமம். இதன் எலும்பு மட்டும் 91 டன்னுக்கு மேல் தேறும். திமிங்கலம் 40 வருடங்கள் வரை உயிர் வாழும். இதன் உடலில் 20 பீப்பாய் எண்ணெயும், 100 பீப்பாய் கொழுப்பும் இருக்கிறது. இதன் தலையில் மட்டும் ஒரு டன் எண்ணெய் கிடைக்கும். திமிங்கலத்தின் எண்ணெயைக் கொண்டு வாசனைத் திரவியம், சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருட்களைத் தயாரிக்கலாம்.

திமிங்கலத்தின் உணவு மீன்கள், சீல், கடல் நாய்கள் தான். இதனுடைய வாயின் நீளம் 18 அடி. வாயைத் திறந்து கொண்டு நீருடன் சேர்த்து இரையை விழுங்கும். ஒரு நாளைக்கு 1,000 கிலோ உணவை உண்கிறது. ஒரு தடவைக்கு ஒரு குட்டி போடும். கருக்காலம் ஒரு வருடம். பிறந்த குட்டிகூட ஒரு பெரிய யானையின் உருவத்தைவிட பெரிதாகவும் அதிக எடையுடனும் இருக்கும். 7.5 மீட்டர் நீளம் பிறக்கும்போதே இருக்கும். குட்டி தாயிடம் பால் குடித்து வளரும். ஒரு தடவைக்கு 46 லிட்டர் பாலை ஒரே மூச்சில் உறிஞ்சிவிடும்.

மூன்று மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக் கும். 9 மீட்டர் நீளம் வளர்ந்தவுடன் தாயை விட்டு பிரியும். ஒரு திமிங்கலம் அதன் வாழ்நாளில் அதிக பட்சமாக 4 குட்டிகள் வரை ஈனும். இதுவும் பாலூட்டி இனங்கள் போன்றே நுரையீரல் மூலம் சுவாசிக்கிறது. மூக்குத் துவாரம் தலையின் மேல் பகுதியில் இருக்கிறது.

மூச்சை வெளியிடும் போது காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீரூற்று போல் பீச்சியடிக்கும். இது நெடுந்தொலைவுக்கு தெரியும். திமிங்கலம் பிராண வாயுவை கிரகித்து கரியமில வாயுவை வெளியிடுகிறது. நீர்மட்டத்திற்கு மேல் வந்து காற்றை இழுத்துக்கொண்டு நீருக்கடியில் சென்றால் 45 நிமிடங்கள் கழித்தே மீண்டும் காற்றுக்காக மேலே வரும்.

ஒருமுறைக்கு சுமார் 12 கிலோ காற்றை இழுத்துக்கொள்ளும். நீருக்கடியில் 162 மீட்டர் ஆழம் வரை நீந்திச் செல்லும். மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும். நீந்துவதற்கு 600 குதிரை சக்தியை செலவிடுகிறது. இதன் கண்கள் மிகச் சிறியவை. இவ்வளவு பெரிய உருவத்துக்கு ஒரு குதிரையின் கண் அளவே உள்ளது. ஆனாலும் இதன் பார்வை மிகக் கூர்மையாகவும், துல்லியமாகவும் இருக்கும்.

கண்களுக்கு அருகே செவித் துளைகள் இருக்கின்றன. ஒரு ஈர்க்குச்சி நுழையும் அளவே இதன் செவித்துலைகள் உள்ளன. திமிங்கலங்களில் பல வகை உண்டு. நீலத் திமிங்கலம், ஸ்பெர்ம் திமிங்கலம், கொலைத் திமிங்கலம், சிலம்புத் திமிங்கலம், வர்க்க திமிங்கலம், பலின் திமிங்கலம் அவற்றில் சில.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com