தினம் ஒரு தகவல் : இயற்கையை விட்டு விலகும் மனிதன்

நாம் உணவு குறித்து நிறைய ஆய்வுகள் நடத்தி இருக்கிறோம். ஆதி மனிதனின் உணவு குறித்தும், நவீன மனிதனின் உணவு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.
தினம் ஒரு தகவல் : இயற்கையை விட்டு விலகும் மனிதன்
Published on

ஐந்து, ஆறு வகையான தானியங்களை மட்டுமே இன்று மனிதர்கள் உண்கிறார்கள். கிழங்குகளை நாம் முற்றிலும் கைவிட்டுவிட்டோம். கிழங்காக இன்று உருளைக் கிழங்கு மட்டுமே பாக்கியிருக்கிறது. தவிர்க்க முடியாமல் வீடுகளில் ஒரு துண்டு சேப்பங்கிழங்கோ, சேனைக் கிழங்கோ சாப்பிடலாம்.

அதே நேரத்தில் பாப்வா நியூகினியாவில் ஆதிவாசிகள் ஏறத்தாழ 160 வகையான தாவரங்களை வளர்த்து உணவாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் என்ன வித்தியாசம் என்று கேட்டால், நம் முன்னோர்கள் ஒரு ஆகாரத்தை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழவில்லை.

ஒரு குரங்கு என்னவெல்லாம் உண்கிறது என்று பார்க்கும்போது அவை பழங்களை மட்டும் உண்ணவில்லை, ஒரு பழத்தை மட்டும் தின்னவில்லை. மொட்டுகளைத் தின்பதுண்டு. பூக்களைத் தின்கிறது. எறும்பைப் பிடித்து தின்கிறது. பல விதமான உணவுகளை செரிப்பதற்கானதுதான் அவற்றின் உணவுக் குழாய். இதில் இருந்து நாம் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட்டால் நோயற்ற வாழ்வு வாழ முடியும்.

சமீப காலம் வரை நாம் உணவு குறித்த விஷயத்தில் வளர்ந்திருந்தோம். கேரளத்து மக்கள் பிரத்தியேகமாகச் சத்தான உணவு உண்கிறார்கள். குறிப்பாக இயற்கையான உணவுகளை உண்ண ஆர்வம் காட்டுகிறார்கள்.

நாமும் மூன்று வேளையும் அரிசி உணவு உண்டவர்கள் அல்ல. காலையில் நாம் கிழங்குகள் சாப்பிட்டோம். மதியம் சாப்பாடு, நிறையக் காய்கறிகள். மாலை நேரத்தில் கஞ்சியும் பயறும். புஷ்டியான உணவு அது.

இன்று காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். இறைச்சிகளை அதிகம் வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கிறோம். அதனையே சமைத்து சாப்பிடுகிறோம். இது எவ்வளவு தூரம் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்கிறது என்று நாம் நினைத்துப் பார்ப்பதில்லை.

நமக்குப் பல்வகை உணவுகள் தேவைப்படுகின்றன. அதை நாமே மறுக்கும் நிலையில் சத்து குறைவு ஏற்பட்டு நோய்கள் உண்டாகின்றன என்பதே உண்மை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com