தினம் ஒரு தகவல் : ஜவ்வரிசி

பாயசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மராட்டியத்தில் கிச்சடி உணவு தயார் செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள்.
தினம் ஒரு தகவல் : ஜவ்வரிசி
Published on

மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவி இருக்கும் இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ.

அங்குள்ள மெட்ரோசைலான் ஸாகு என்ற ஒரு வகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது.

இந்த உணவுப் பொருள் ஜாவா தீவில் இருந்து இறக்கப்பட்டதால் அது ஜாவா அரிசி என அழைக்கப்பட்டு பிறகு அந்த சொல் மறுவி ஜவ்வரிசி ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் ஜவ்வரிசி வேறானது. இந்த ஜவ்வரிசிக்கும் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது.

முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டு, பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது.

இந்த நிலையில் சேலத்தில், குச்சிக்கிழங்கு மாவை குருணை, குருணையாக மாற்றி ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்து அதை ஜவ்வரிசிபோல மாற்றினர். இவ்வாறுதான் இங்கு ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வியாபாரம் 1943-ம் ஆண்டில் பிரபலம் அடைந்தது. பிறகு இந்த தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்கு தடை வந்தது. பிறகு இந்த தடை நீங்கியது. இப்படியாக குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது.

வெளிநாட்டு ஜவ்வரிசிக்கும், குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக் கும் சுவை அளவில் வித்தியாசம் இருக்காது. இதுபோன்ற பல காரணங்களால் குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் ஜவ்வரிசிக்கு அங்கீகாரம் கிடைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com