

ஒட்டகங்களின் ஆயுட்காலம் 30 முதல் 50 ஆண்டுகள். ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்களை அவற்றின் பால், இறைச்சிக்காகவும், சுமைகளை ஏற்றிச் செல்லவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஒட்டகத்தின் மிகவும் புகழ் பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 45 நாட்கள் வரை நீர் அருந்தாமல் பாலை வனத்தில் வாழக்கூடிய தன்மை உண்டு. மேய்வதற்கு புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் உயிர் வாழும். அதே போல் ஒரு முறை தண்ணீர் குடிக்கும்போது சுமார் 100 லிட்டர் தண்ணீரை ஒட்டகம் அருந்துகிறது.
ஒட்டகத்தின் உடல் 34 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையை தாங்கக்கூடியது. மனிதர்களின் உடல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டகங்கள் உடலில் இருந்து வியர்வையை வெளியிடுவதில்லை. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைவனங்களில் பயணம் செய்ய மிக சிறந்த விலங்காக கருதப்படுகின்றது. ஒட்டகத்தின் முடியும், தோலும் வெப்ப தடுப்பானாக பயன்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
ஒட்டகம் ஏறத்தாழ 200 கிலோ எடையை சுமந்து கொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க கூடியது. ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையுடனும் இருக்கும். அதன் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும்.
ஒட்டகப் பால் பாலைவன பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒட்டகப் பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. ஒட்டக இறைச்சி பல நூற்றாண்டுகளாக சோமாலியா, சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, லிபியா, சூடான், எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளில் உண்ணப்படுகிறது.