

ஆனால், இந்தப் பூவுலகம் உயிர் கொண்டது. உயிரினங்கள் அனைத்தும் கூடி பூமி என்ற சிறப்பு உயிரை உருவாக்குகின்றன என்ற கருத்தை முன் வைத்தவர் சூழலியல் அறிவியலாளர் ஜேம்ஸ் லவ்லாக்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பால் வெளியில் உள்ள புதிய கோள்களை தேடும் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதற்கான கருவிகளை ஜேம்ஸ் லவ்லாக் வடிவமைத்தார். இந்த ஆராய்ச்சியின்போது பூமியின் வளி மண்டலத்தையும், மற்ற கோள்களின் வளி மண்டலத்தையும் ஒப்பிடுகையில், நமது உயிர்க் கோளம் மாறுபட்டிருப்பதை அவர் கவனித்தார். பூமி என்ற உயிர்க்கோளத்துடன் வளிமண்டலம் ஒருங்கிணைந்து ஒரு முழுமையான அமைப்பாக இருப்பதாக அவர் கருதினார்.
அதன் அடிப்படையில் 1960-களில் பூமி ஒரு சிறப்பு உயிரி எனும் கருத்தை முன் வைத்தார். மனிதனும், மற்ற அனைத்து வகை உயிரினங்களும், தாவரங்களும், பூமி என்ற இந்த சிறப்பு உயிரியின் பாகங்கள். சுற்றுச்சூழலும், உயிரினங்களும் பூமி என்ற சிறப்பு உயிரியின் பிரிக்க முடியாத அம்சங்கள். அவை ஒன்றோடு மற்றொன்று நெருங்கிய உறவு கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இணைந்த ஓர் அமைப்பு தான் பூமி.
இயற்கை மட்டும் தான் அதில் சிறப்புமிக்கது. இதை ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் நிரூபித்து வருகின்றன. மேலும் கோடிக்கணக்கான ஆண்டுகளில் இயற்கை பின்னிய உயிர் வலைப்பின்னல்கள் நுணுக்கமும், நேர்த்தியும் வாய்ந்தவை. அதில் ஏற்படும் சிறு தொந்தரவுகூட மொத்த பூமிப் பந்தையும் குலைத்துப் போடும் என்பதுதான் லவ்லாக் கூறிய கருத்தின் அடிப்படை.
இயற்கையை அதன் போக்கில் விட்டிருந்தால், அதில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை அதுவே சமன்படுத்திக் கொள்ளும். ஆனால் மனிதக் குலம் இயற்கை மீது தொடர்ச்சியாக ஏற்படுத்தி வரும் இடையூறுகளால், பூமி தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் வித்தையைத் தொலைத்து விட்டது. அதன் தீவிர வெளிப்பாடுதான், பேசும் பொருளாகிவிட்ட புவி வெப்பமடைதல்.
பூமி வரைமுறையின்றி வெப்பம் அடைவதற்கு காரணமாக இருக்கும் புவி வெப்பமடைதல் தொடர்பான கொள்கைகள் வலுவடைவதற்கு முன்பே அந்த கருத்தினை லவ்லாக் முன் வைத்து விட்டார். இன்றைக்கு புவி வெப்பம் அடைதல், பருவநிலை சார்ந்த மாற்றங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அவரது கருத்து பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.