

அப்போது ஒரு பருந்து அந்த குஞ்சை கொத்திச் செல்வதற்காக மேலிருந்து கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பாம்பும்கூட அந்த குஞ்சை கவ்விச் செல்ல வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பருந்தையும் பாம்பையும் துரத்தி விட்டு குருவிக் குஞ்சை எடுத்து, அதன் கூட்டைத் தேடி அதில் விடுவதா? அல்லது உங்கள் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்ப்பதா? அல்லது விலங்குகள் நலச்சங்கத்துடன் தொடர்பு கொண்டு அவர்களை வந்து எடுத்துப் போகச் சொல்வதா? அல்லது அந்த குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதா? எது சரியான செயல்?
அந்த குஞ்சை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவதுதான் சரி. இதென்ன கொஞ்சம்கூட இரக்கமில்லாத முறையாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் சரி. இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். பருந்தும் பாம்பும் அந்த குஞ்சைத் தின்னக் கூடாது என்று நீங்கள் நினைத்தால், அப்புறம் பருந்தும் பாம்பும் எப்படி உயிர்வாழ்வதாம்? இயற்கையில் உள்ள உணவுச் சங்கிலியே ஒன்றை ஒன்று இரையாக்கிக்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.
பூச்சியை தவளை தின்கிறது, தவளையை பாம்பு தின்கிறது, பாம்பை பருந்து தின்கிறது. இப்படித்தான் இருக்கும் உணவுச் சங்கிலி. அதை இடையூறு செய்தால் மொத்த உணவுச் சங்கிலியும் பாதிக்கப்படும். இயற்கையில் எங்கே கைவைத்தாலும் ஏதாவதொரு இடத்தில் ஒரு பாதிப்பு ஏற்பட்டுவிடும். அவ்வளவு நுண்மையான சமநிலையில்தான் இயற்கை அமைந்திருக்கிறது. இருந்தாலும் அந்த குஞ்சு பாவமல்லவா, அதை அதன் கூட்டிலாவது கொண்டுபோய் சேர்க்கலாமல்லவா என்று கேட்கலாம். இல்லை, பெரும்பாலும் அந்த குஞ்சை தாய்ப்பறவை தன் கூட்டில் சேர்க்காது. சரி, வீட்டில் கொண்டுவந்து வளர்க்கலாம் என்று கூறலாம்.
எப்படி வளர்ப்பீர்கள், நாய்க்குட்டியை வளர்ப்பது போலவா அல்லது கூண்டுக்கிளியை வளர்ப்பது போலவா? பறப்பதற்காக பிறந்த ஒரு பறவையை வீட்டில் கொண்டுவந்து வளர்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அது மட்டுமல்லாமல் அதன் உணவுப் பழக்கமும் பிற பழக்கங்களும் எதுவும் நமக்குத் தெரியாது. இதற்கு பேசாமல் அந்த குஞ்சை அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது.
பறவைகளின் மேல் நமக்கு உண்மையில் இரக்கம் இருந்தால், அவை வாழ்வதற்கு ஏற்ற சூழலை நாம் உருவாக்கித்தர வேண்டும். பறவைகள் வாழ்வதற்கேற்ற சூழல்தான், நாம் வாழ்வதற்கேற்ற சூழல் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
காடுகளை அழிக்காமல் இருக்க வேண்டும். பூச்சி மருந்துகள், செயற்கை உரங்கள் நீரிலும் மண்ணிலும் கலக்கும்போது தீமைசெய்யும் ஒரு சில பூச்சிகளோடு நன்மை செய்யும் எண்ணற்ற பூச்சிகளும் அழிந்துவிடுகின்றன. இரைக்காகப் பூச்சிகளை நம்பியிருக்கும் பெரும்பாலான பறவைகளுக்கான இரையும் அழிந்து போய்விடுகிறது. எனவே இவற்றை தவிர்த்து இயற்கையை நேசித்தால் பறவை இனங்களுக்கு பாதிப்பு வராது.