தினம் ஒரு தகவல் : தாமரையின் மருத்துவ குணம்

இந்தியாவின் தேசிய மலர் என்ற மரியாதைக்குரியது தாமரை. பார்க்க அழகான ஒரு மலர் என்றாலும் அளவில் பெரியது என்ற காரணத்தினால் மற்ற பூக்களை போல் தாமரையைப் பெண்கள் தலையில் சூடிக் கொள்வதில்லை. ஆனால், கோவில்களிலும், அலங்காரம் செய்வதற்கும் தாமரை பெரிதும் பயன்படுகிறது.
தினம் ஒரு தகவல் : தாமரையின் மருத்துவ குணம்
Published on

பொதுவாக தாமரை மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தது என்பதை மக்கள் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டார்கள். குளம், குட்டைகளில் தாமரை வளரும். சேற்றுப்பகுதி, களிமண் பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தால் அங்கேயும் தாமரைச் செடி வளரும். பல வகை தாமரை உண்டு என்றாலும் இந்தியாவைப் பொறுத்தமட்டில் இளஞ்சிவப்பு, சிவப்பு, வெள்ளை என்ற நிறங்களில்தான் தாமரை பெரும்பாலும் வளரும்.

தாமரையின் பூ, மகரந்தம், தண்டு, விதை ஆகியவை சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது. குறிப்பாக, தாமரையினை மூன்று முக்கிய உள்ளுறுப்புகளுக்கு தாமரையை சித்த மருத்துவம் அதிகம் பயன்படுத்துகிறது. தாமரைக்கும் இதயத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. செந்நிற தாமரை இதயத்திற்கு மிகவும் நல்லது.

தற்போது மருத்துவ வசதிகள் முன்பை விட அதிகரித்திருந்தாலும், பொதுவான மக்களின் ஆரோக்கியம் என்பது குறைந்தே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக நிறைய பேர் தனக்கு தெரியாமலே கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில், வெளியே தெரியாமல் அமைதியாக பாதிக்கப்படும் உறுப்பாக கல்லீரல் இருக்கிறது. கல்லீரல் பாதிப்பு அவ்வளவு சீக்கிரம் வெளியே தெரியாது. சமீப ஆண்டுகளாக கல்லீரல் பாதிப்பு அதிகரிக்க ஒரு முக்கிய காரணம் மக்களிடையே அதிகரித்திருக்கும் மதுப்பழக்கம் தான். பாதிக்கப்பட்ட கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு வெண் நிற தாமரை சிறந்த மருந்து.

வயதாகும்போது மூளையின் திசுக்கள் சிதைவடைய ஆரம்பிக்கும். அதனால் வயதாகும்போது மூளையின் செயல்பாடுகள் மந்தமாகும். அதனால் தான் நாம் சிறுவயதில் இருந்தது போல் வயதாகும் போது சுறுசுறுப்பாக இருப்பதில்லை. சிறு வயதில் இருக்கும் வேகமாக பதில் அளிக்கும் திறன், யோசிக்காமல் உடனடியாக கூர்மையாக பதில் சொல்வது, கற்றல் திறன் போன்றவை வயதாகும்போது குறையும். தாமரைப்பூ மூளை திசுக்களை பாதுகாத்து மூளையை விழிப்புணர்வுடன் இருக்க செய்கிறது. அதனால் மூளை நன்கு வேலை செய்யும்.

வெண்தாமரை மற்றும் செந்நிற தாமரை இரண்டுமே மூளைக்கு நல்லது. அவற்றின் கசாயத்தை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, மூளையின் சோர்வான செயல்பாட்டை மாற்றி கற்றல் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com