பள்ளி மாணவர்களிடம் 17 ஆண்டுகளில் நீரிழிவு நோய் அறிகுறி அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை கிண்டியில் உள்ள இந்திய நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் பள்ளி மாணவர்களிடம் 2023-ம் ஆண்டு ஒரு ஆய்வை நடத்தினர்.
பள்ளி மாணவர்களிடம் நீரிழிவு நோய் அறிகுறிகள் அதிகரிப்பு
Published on

சென்னை,

சென்னையில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 17 ஆண்டுகளில் பல மடங்கு நீரிழிவு நோய் அறிகுறி அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

954 மாணவர்கள்

சென்னை கிண்டியில் உள்ள இந்திய நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் நந்திதா ராமச்சந்திரன், பிரிசில்லா சூசைராஜ், சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, வினிதா ராமச்சந்திரன், சினேகலதா சாமுகுட்டன், அம்பாடி ராமச்சந்திரன் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் 2023-ம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.

அதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 954 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 587 பேர் மாணவிகள், 367 பேர் மாணவர்கள். இந்த ஆய்வு முடிவுகள், கடந்த 2006-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளுடன் ஒப்பிடப்பட்டன. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:

26.4 சதவீதம் அதிகம்

2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 3.1 சதவீத மாணவிகளிடம் நீரிழிவு நோய் பாதிப்பு காணப்பட்டது. ஆனால் 2023-ம் ஆண்டில் அது 28.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே போன்று 2006-ம் ஆண்டில் 3.5 சதவீத மாணவர்களிடம் காணப்பட்ட இந்த பாதிப்பு, 2023-ம் ஆண்டில் 26.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2006-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ம் ஆண்டில் மாணவர்களின் உடல் நிறை குறியீடு, இடுப்புச் சுற்றளவு, 'சிஸ்டாலிக்' ரத்த அழுத்தம் மற்றும் வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரையின் சராசரி அளவு அதிகரித்துள்ளது. மாணவிகளை பொறுத்தவரை ரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின் உடல் நிறை குறியீடும், இடுப்பு சுற்றளவும் பாதிப்பு இல்லாத மாணவிகளைவிட அதிகமாக இருந்தது.

77.4 சதவீதம் பேரிடம்...

இதுதவிர நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படும் எச்.டி.எல். கொழுப்பு குறைவாக இருப்பது, டிரைகிளிசரைடு அதிகமாக இருப்பது, வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருப்பது, ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பது ஆகிய இதயம் மற்றும் வளர்சிதை மாற்றம் தொடர்பான அபாய காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன. 2023-ம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்ட மாணவர்களில் 77.4 சதவீதம் பேரிடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அபாய காரணிகள் காணப்பட்டன. 2006-ம் ஆண்டில் இது 74.4 சதவீதமாக இருந்தது. 3 அல்லது அதற்கு மேற்பட்ட அபாய காரணிகள் இருந்த மாணவிகளின் எண்ணிக்கை 2006-ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த நிலையில், 2023-ம் ஆண்டில் 9 சதவீதமாக உயர்ந்தது. மாணவர்களிடம் இது 8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக அதிகரித்தது.

நீரிழிவு அபாயம்

கடந்த 17 ஆண்டுகளில் இளம் பருவ பள்ளி மாணவர்களிடம் உடல் பருமன் அதிகரித்ததுடன், வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் பாதிப்பும் பல மடங்கு உயர்ந்துள்ளது. மாணவர்களைவிட மாணவிகள் அதிக அபாயத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இளம் பருவத்திலேயே ஏற்படும் இதுபோன்ற வளர்சிதை மாற்ற பாதிப்புகள், எதிர்காலத்தில் அவர்கள் பெரியவர்களாகும்போது நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கலாம்.

குறிப்பாக இளம் வயதினரிடையே ‘டைப்-2' நீரிழிவு நோய் மேலும் அதிகரிப்பதற்கான ஆரம்ப அறிகுறியாக தற்போதைய நிலை இருக்கக்கூடும். எனவே பள்ளிகளிலேயே ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com