

"பீத்தோவன் தனது செவித்திறன் இழப்பை கையாண்ட விதம், இசைக்கு மட்டுமல்லாமல் மனிதகுலத்திற்கே ஒரு மகத்தான எடுத்துக்காட்டாகும்."
இசையமைப்பாளர் டொனாட்டோ கப்ரெரா
மேற்கத்திய இசை பாரம்பரியத்தில், கிளாசிக்கல் கால(Classical Era) இசையின் தன்மைகளை ரொமாண்டிக் காலத்தின்(Romantic Era) இசைக் கூறுகளோடு இணைத்து ஒரு புதிய புரட்சியை நிகழ்த்தியவர் இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன் (Ludwig van Beethoven).
இவர் 1770-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி ஜெர்மனியின் பான்(Bonn) நகரில் பிறந்தார். பீத்தோவனின் தந்தை ஜோஹான் வான் பீத்தோவன், ஒரு இசை ஆசிரியர் ஆவார். அவர் தனது மகன் பீத்தோவனுக்கு சிறு வயதில் இருந்தே இசைப் பயிற்சி அளித்தார். பின்னர் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவுக்கு சென்று ஹைடன், சாலியரி போன்றவர்களிடம் இசை பயின்ற பீத்தோவன், விரைவில் வியன்னாவின் பிரபல இசையமைப்பாளராக உயர்ந்தார்.
அவரது புகழ்பெற்ற படைப்புகளான 9 சிம்பொனிகள், பியானோ சொனாடாக்கள், ஸ்ட்ரிங் குவார்ட்டெட்டுகள் மற்றும் “ஒடே டு ஜாய்” (Ode to Joy) போன்ற பாடல்கள் இன்றும் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
பீத்தோவனுக்கு 26 வயதில் இருந்தே, சுமார் 1796-1798க்கு இடைப்பட்ட காலங்களில், காது கேட்கும் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. முதலில் உயர் அதிர்வெண்(High Frequency) ஒலிகளை கேட்பதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. பின்னர் அது மோசமடைந்து, 1814-க்குள் முழுமையாக காது கேட்காத நிலை ஏற்பட்டுவிட்டது.
தன் வாழ்நாள் முழுவதும் இசையை மட்டுமே சார்ந்திருந்த பீத்தோவனுக்கு, செவித்திறனை இழந்தது மிகப்பெரிய சோகமாக இருந்துள்ளது. தனக்கு காது கேட்பதில் பிரச்சினை ஏற்பட்டதை வெளியே சொல்வதற்கும் அவர் பயந்துள்ளார். தனது தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என அவர் எண்ணியுள்ளார். இதனால் அவருக்கு தற்கொலை எண்ணம் கூட ஏற்பட்டதாக அவர் எழுதிய “ஹெய்லிகென்ஸ்டாட் டெஸ்டமென்ட்” (Heiligenstadt Testament) என்ற கடிதத்தில் பீத்தோவன் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் தனக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவால் பீத்தோவன் இசையை விட்டுவிடவில்லை. செவித்திறனை இழந்த பிறகும் அவர் இசை அமைப்பதை நிறுத்தவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், செவித்திறனை இழந்த பிறகு ஆகச்சிறந்த இசைப்படைப்புகளை பீத்தோவன் இந்த உலகத்திற்கு அளித்தார்.
அவரது இந்த அசாத்திய சாதனைக்கு உள்ளுணர்வு மற்றும் நினைவுத்திறன் ஆகியவையே முக்கிய காரணங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அவருக்கு சிறுவயதில் இருந்தே இசையை கேட்ட அனுபவம் ஏராளமாக இருந்துள்ளது. சாதாரணமாக மற்றவர்கள் இசையை கேட்பது போல் இல்லாமல், இசையின் நுணுக்கங்களை ஆராய்ந்து அதனை தனது மனதில் பீத்தோவன் பதியவைத்துக் கொள்வார். அந்த நினைவும், இசையின் கோட்பாடுகளும் (ஹார்மனி, மெலடி, ரிதம்) அவரது மனதில் ஆழமாக பதிந்திருந்தன.
பியானோவை வாசிக்கும்போது தனது வாயில் ஒரு இரும்பு கம்பியை கடித்துக் கொள்வார். அந்த இரும்புக் கம்பியின் மற்றொரு முனை பியானோ மீது இருக்கும். இவ்வாறு பியானோவின் அதிர்வுகளை உணர்ந்து அவர் இசை அமைக்கத் தொடங்கினார்.
சில சமயங்களில் பியானோவின் சத்தம் அதிகமாகி அவரது வீட்டு உரிமையாளர்களை அந்த சத்தம் எரிச்சலைடையச் செய்துள்ளது. இதனால் வியன்னாவில் தங்கியிருந்த சமயத்தில் பீத்தோவன் அடிக்கடி வீடு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
லுட்விக் வான் பீத்தோவன் மொத்தம் 9 சிம்பொனிகள் இயற்றியுள்ளார். இவை அவரது இசை வாழ்க்கையின் பரிணாமத்தை தெளிவாகக் காட்டுகின்றன. தொடக்க காலத்தில் அவர் இயற்றிய இசை ஆனந்தமாகவும், உற்சாகம் நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் அவர் இயற்றிய இசை, மனதை உருக்கக் கூடிய கீதங்களாக வெளிப்பட்டன.
பீத்தோவனின் முதல் இரண்டு சிம்பொனிகள் மொசார்ட், ஹைடன் போன்றவர்களின் சாயலில், கிளாசிக்கல் பாணியில் அமைந்திருந்தாலும், 3-வது சிம்பொனியில் இருந்து பீத்தோவனின் தனித்துவமான பாணி வெளிப்படத் தொடங்கியது.
இதில் 5, 6, 7 மற்றும் 9-ம் சிம்பொனிகள் மிகப்பிரபலமானவை. இன்று வரை உலக அரங்குகளில் அதிகம் இசைக்கப்படும் சிம்பொனிகளில் இவை முன்னிலை வகிக்கின்றன.
அவர் தனது படைப்புகளை பலமுறை திருத்தி எழுதினார். “எரோயிகா” சிம்பொனி, மூன் லைட் சொனாடா, “ஃபேட்” சிம்பொனி, மற்றும் இறுதியாக 9-வது சிம்பொனி ஆகியவை காது கேட்காத காலத்தில் பீத்தோவனால் படைக்கப்பட்டவை ஆகும்.
லுட்விக் வான் பீத்தோவனின் 9-வது சிம்பொனி (Symphony No. 9 in D minor, Op. 125) அவரது கடைசி சிம்பொனியாகவும், இசை வரலாற்றில் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. 1824-ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த சிம்பொனி, பீத்தோவன் முழுமையாக காது கேட்காத நிலையில் உருவாக்கிய அதிசயப் படைப்பாகும்.
அந்த சிம்பொனியின் அரங்கேற்றம் முடிந்தபோது, சிம்பொனியை கண்டக்ட்(Conduct) செய்து கொண்டிருந்த பீத்தோவனுக்கு பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் கேட்கவில்லை. மேடையில் இருந்த இசைக் கலைஞர்கள், பீத்தோவனை திருப்பி நிறுத்தி, பார்வையாளர்களின் கைதட்டலை அவருக்குக் காட்டினர். அப்போது அவர் கண்களில் கண்ணீர் வழிந்ததாக கூறப்படுகிறது. இந்த 9-வது சிம்பொனி, கிளாசிக்கல் இசையை ரொமான்டிக் காலத்திற்கு இட்டுச் சென்ற முக்கிய படைப்பாக பார்க்கப்படுகிறது.
பீத்தோவன் இசையை வெறும் ஒலியாக மட்டும் பார்க்கவில்லை. இசை என்பது ‘மனித ஆன்மாவின் மது’ என்று பீத்தோவன் கூறினார். 1827-ம் ஆண்டு மார்ச் 26-ந்தேதி பீத்தோவன் இந்த உலகை விட்டு மறைந்தார். இன்றுவரை உலகின் மிகச்சிறந்த இசை மேதைகளில் ஒருவராக பீத்தோவன் அறியப்படுகிறார். உடல் குறைபாடுகளை மீறி மன உறுதியால் வெற்றி பெற முடியும் என்பதற்கு பீத்தோவனின் வாழ்க்கை ஒரு சாட்சியாகத் திகழ்கிறது.
துன்பத்திலும், சோகத்திலும் தனது வாழ்வின் பெரும்பகுதியை கழித்த பீத்தோவன், உலகிற்கு தனது உன்னத இசையை வழங்கியதோடு, மனிதர்களின் மனஉறுதி, உத்வேகம் மற்றும் நம்பிக்கைக்கு ஒரு எடுக்காட்டாகத் திகழ்கிறார்.
“கலையை பயில்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அதன் ரகசியங்களை ஊடுருவி அறிந்துகொள்ள முயல வேண்டும். ஏனெனில் கலையும், அறிவும் மனிதர்களை தெய்வீக நிலைக்கு உயர்த்த வல்லவை.”
லூட்விக் வான் பீத்தோவன்