

தங்கம் என்றாலே 'பாதுகாப்பான முதலீடு' என்ற எண்ணம் பல ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. ஆனால், தங்கம் வைத்திருக்கும் முறை மட்டும் மாறிவிட்டது. ஒருகாலத்தில் கடைக்குச் சென்று தங்க நகை, நாணயம் வாங்குவது வழக்கமாக இருந்த நிலையில், இன்று பலர் மொபைல் செயலிகள் மூலம் 'டிஜிட்டல் தங்கம்' வாங்கத் தொடங்கியுள்ளனர்.
சரி..! இந்த சமயத்தில் டிஜிட்டல் தங்கம், நகை தங்கம் இவ்விரண்டில் எது பாதுகாப்பானது என்ற சந்தேகம் வரலாம். இரண்டிலும் பாதுகாப்பு இருக்கிறது. அதே நேரத்தில், அபாயங்களும் இருக்கின்றன. அதை அறிந்து கொள்வோமா..?
டிஜிட்டல் தங்கத்தின் மிகப்பெரிய பலம் அதன் எளிமை. சில நொடிகளில் சிறிய தொகையிலேயே தங்கம் வாங்க முடியும். பாதுகாப்பாக வைப்பது, லாக்கர் கட்டணம், திருட்டு போன்ற கவலைகள் எதுவும் இல்லாமல், மொபைலில் எல்லாவற்றையும் கண்காணிக்க முடியும். தினசரி சிரமங்களை தவிர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது பெரிய வசதியாகும்.
ஆனால், இதன் மறுபக்கம் பலர் கவனிக்காத ஒன்று. டிஜிட்டல் தங்கத்தில் நீங்கள் தங்கத்தை நேரடியாக வைத்திருக்கவில்லை. அதை உங்கள் பெயரில் வைத்திருக்கிறோம் என்று கூறும் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். அந்த நிறுவனம் ஏதேனும் சிக்கலில் சிக்கினால், உங்கள் முதலீட்டை திரும்ப பெறுவது சிரமமாக மாறலாம். இந்தியாவில் இது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட (regulated) துறையாக இல்லாததும் கவனிக்க வேண்டிய அம்சம்.
தங்கம் நகையாக, நாணயமாக நம்மிடம் இருந்தால் எந்த இடையூறும் இல்லாமல் அது உங்கள் சொத்து. ஆனால், அதை பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு சவாலாக மாறுகிறது. வீட்டில் வைத்தால் பாதுகாப்பு கேள்விக்குறி, வங்கி லாக்கர் எடுத்தால் கூடுதல் செலவு, நகை வாங்கும்போது செய்கூலி, சேதாரம், தங்கத்தில் தரம் குறித்து சந்தேகம் போன்றவை கூட சேர்கின்றன.
விற்பனை விஷயத்தில் இரண்டிலும் வேறுபாடு உள்ளது. டிஜிட்டல் தங்கத்தை சில நொடிகளில் வாங்கவும், விற்கவும் முடியும். ஆனால் நகை அல்லது நாணயம் விற்க, நகைக்கடை அல்லது விற்பனையாளர் தேவைப்படும். இடத்துக்கு இடம் விலை மாறக்கூடும்.
"பாதுகாப்பு" என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது. திருட்டு, சேமிப்பு சிரமம் போன்றவற்றை தவிர்க்க விரும்பினால், டிஜிட்டல் தங்கம் நிம்மதியாக தோன்றும். ஆனால் முழு கட்டுப்பாடு, எந்த நிறுவனம் மீதும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்றால், கையிலிருக்கும் தங்கமே நம்பிக்கையை தரும்.
இரண்டில் எது சிறந்தது என்று அலசி ஆராய்வதை விட, உங்கள் தேவைக்கு எது பொருத்தமானது என்பதே முக்கியம். வசதியா? அல்லது முழு உரிமையா? இந்த இரண்டு கேள்விகளுக்கான உங்கள் பதிலே சரியான தேர்வை நிர்ணயிக்கும். சிறிய அளவில், எளிதாக முதலீடு செய்ய விரும்பினால் டிஜிட்டல் தங்கம் நல்ல தேர்வாக இருக்கலாம். ஆனால் நீண்ட காலத்திற்கு மதிப்பை பாதுகாக்க, கையிலிருக்கும் தங்கம் இன்னும் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.