

ஒரு ரெயிலின் மைலேஜ் என்பது அதன் வகை, எடை, பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் வழித்தடத்தில் எத்தனை முறை நிறுத்தப்படுகிறது என்பதற்கு ஏற்ப மாறுபடும். இந்திய ரெயில்வேயில் தற்போது மின்சார இன்ஜின்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், சில வழித்தடங்கள் மற்றும் பகுதிகளில் டீசல் இன்ஜின்களும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக, 12 பெட்டிகள் கொண்ட ஒரு பயணிகள் ரெயில் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்ல சுமார் 6 லிட்டர் டீசல் தேவைப்படலாம். அதாவது, ஒரு லிட்டர் டீசலில் அந்த ரெயில் சுமார் 0.17 கிலோமீட்டர், அதாவது 170 மீட்டர் மட்டுமே பயணிக்க முடியும். பயணிகள் ரெயில்கள் சிறிய மற்றும் பெரிய நிலையங்கள் என பெரும்பாலான நிலையங்களிலும் நின்று செல்கின்றன. இதனால் அவை அடிக்கடி பிரேக் பிடித்து, மீண்டும் வேகத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக எரிபொருள் நுகர்வும் அதிகமாகிறது.
விரைவு மற்றும் சூப்பர்பாஸ்ட் ரெயில்களைப் பொறுத்தவரை, 12 பெட்டிகள் கொண்ட ஒரு விரைவு ரெயில் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்ல சுமார் 4.5 லிட்டர் டீசல் தேவைப்படலாம். அதாவது, ஒரு லிட்டர் டீசலில் சுமார் 220 மீட்டர் தூரம் பயணிக்க முடியும்.
மறுபுறம், 24 பெட்டிகள் கொண்ட ஒரு சூப்பர்பாஸ்ட் ரெயில் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்ல சுமார் 6 லிட்டர் டீசல் தேவைப்படலாம். இதற்கு அதிக எண்ணிக்கையிலான பெட்டிகள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் கூடுதல் எடை முக்கிய காரணமாக இருக்கலாம்.
மின்சார இன்ஜின்களைக் கொண்ட ரெயில்களைப் பொறுத்தவரை, ஒரு கிலோமீட்டர் தூரம் இயக்க சுமார் 20 யூனிட் மின்சாரம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நிலவரப்படி, ஆஜ்மீர் ரெயில்வே டிவிஷனில் ரெயில்களுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் ஒரு யூனிட்டின் விலை ரூ.6.50 ஆக இருந்தது. இதன்படி கணக்கிட்டால், ஒரு ரெயில் ஒரு கிலோமீட்டர் தூரம் செல்ல சுமார் ரூ.130 மின்சாரச் செலவு ஏற்படும். தற்போதைய நிலவரப்படி இந்தத் தொகை சற்று அதிகமாக இருக்கலாம். எனவே, தோராயமாக ஒரு கிலோமீட்டர் தூரம் ரெயிலை இயக்குவதற்கு ரூ.150 வரை மின்சாரச் செலவு ஆகலாம் எனக் கருதலாம்.இது மின்சாரத்திற்கான செலவு மட்டுமே. இதனுடன் பராமரிப்பு, ஊழியர்கள் உள்ளிட்ட இதர செலவுகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஒரு கிலோமீட்டர் ரெயில் இயக்கத்திற்கான மொத்த செலவு இதைவிட மேலும் அதிகமாக இருக்கும்.