

இந்தியர்கள் எந்தெந்த செயலிகளில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்த ஆய்வில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. செல்போன் உலகில் இன்று அனைவரும் மூழ்கிப் போய்த்தான் கிடக்கிறோம். இதில் யாரும் மாற்று கருத்தை சொல்ல முடியாது. ஒருவர் வீட்டில் இருந்து வெளியில் புறப்படுவதற்கு முன்பு எந்த பொருளை எடுக்க மறக்கிறாரோ? இல்லையோ? முதலில் கையில் எடுப்பது செல்போனாகத் தான் இருக்கும். அந்தவகையில் நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கிய அங்கமாகவே அது மாறிவிட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்தும் பயனாளர்கள் எந்த செயலியில் (அப்ளிகேஷன்ஸ்) அதிக நேரம் செலவிடுகிறார்கள்? என்பது குறித்து 'பேங்க் ஆப் அமெரிக்காவின்' நிதிச்சந்தை ஆராய்ச்சி பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. அதில் ஒரு மாதத்தில் எவ்வளவு நேரம் அந்த செயலிகளில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்ற புள்ளிவிவரங்களுடன் ஆய்வை வெளியிட்டுள்ளது.
அதில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள் ஒரு மாதத்துக்கு சராசரியாக இன்ஸ்டாகிராம் செயலிக்கு 49 மணி நேரம் 42 நிமிடமும், யூ-டியூப் செயலிக்கு 47 மணி நேரம் 23 நிமிடமும் செலவிடுகிறார்கள். அதாவது நாளொன்றுக்கு சுமார் 1% மணி நேரத்துக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். அதற்கடுத்தபடியாக முகநூலில் 24 மணி நேரம் 45 நிமிடமும், 'எக்ஸ்' தளத்தில் 13 மணி நேரம் 30 நிமிடமும் கழிக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமூக வலைத்தளங்களை தவிர, ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு (பிரீ பயர்) இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதற்கு மட்டும் மாதத்துக்கு 41 மணி நேரம் 12 நிமிடம் செலவிடுகிறார்கள். இதேபோல், லுடோ கிங், கேரம் ஆகிய கேமிங் செயலிகளுக்கு முறையே சுமார் 13 மணி நேரம் செலவு செய்கிறார்கள். சமூக வலைத்தளங்கள், கேமிங் செயலிகளை போல, ஓ.டி.டி. தளங்களிலும் நீண்ட நேரம் நேரத்தை செலவிடுகிறார்கள். அதில் பிரபல நிறுவனங்களின் ஓ.டி.டி. தளங்களை அதிகபட்சமாக மாதத்துக்கு இந்தியர்கள் சராசரியாக 10 மணி நேரம் முதல் 22 மணி நேரம் வரை பயன்படுத்துகிறார்கள்.
இதுதவிர வாட்ஸ்-அப் செயலியில் மாதத்துக்கு 18 மணி நேரம் 49 நிமிடம் சராசரியாக இந்தியர்கள் செலவிடுவதும் இந்த புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் குறைவாக இருப்பதும், மலிவான ஸ்மார்ட்போன்கள் பரவலாக கிடைப்பதும் மக்கள் தங்களின் பெரும்பகுதி நேரத்தை பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் சமூக வலைத்தளங்களில் செலவிட வழிவகுத்துள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் அசுர வளர்ச்சியை காட்டுவதாக சொல்லப்பட்டிருக்கிறது.