

புதுடெல்லி,
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாப்தீன், தாயார் ஆசியம்மா. ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
அப்துல் கலாம் பிறந்த நேரத்தில் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. சிறுவயதில் கலாம் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். அவரது மூத்த சகோதரி ஜோகனராவின் கணவர் ஜலாலுதீன், கலாமின் சிறந்த நண்பராக விளங்கினார். இவர் சிறுவயதிலேயே அப்துல் கலாமுக்கு ஆன்மீகம், அறிவியல் மற்றும் உலக நடப்புகள் குறித்து விரிவான பார்வை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தவர் ஆவார்.
1954-ம் ஆண்டு திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற அப்துல் கலாம், 1955-ல் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிக்கச் சென்றார். அப்துல் கலாம் தனது இளம் வயதில் போர் விமானி ஆக வேணும் என கனவு கண்டார். ஆனால் இந்திய வான்படையில் விமானி ஆவதற்கான தகுதிச் சுற்றில் நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டார்.
ஒரு விமானியாக விமானத்தில் பறக்க வேண்டும் என்ற அவரது கனவு அந்த சமயத்தில் நிறைவேறாமல் போனாலும், விமானத்தை உருவாக்கும் பணியில் அவருக்கான இடம் காத்திருந்தது. 1960-ம் ஆண்டு தனது சென்னை ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பை முடித்த கலாம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின்(DRDO) வானூர்தி அபிவிருத்திப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அப்துல் கலாம் தனது வாழ்வில் பல உயரங்களை எட்டுவதற்கான தொடக்கமாக அது அமைந்தது.
தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழுவில் (INCOSPAR) சேர்ந்த கலாம், அங்கு புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியான விக்ரம் சாராபாய் தலைமையின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின்(ISRO) தும்பா ஏவுதளத்தில் பணியில் சேர்ந்தார்.
இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் எவுதள வாகனம்(எஸ். எல். வி-III) திட்ட இயக்குநராக அப்துல் கலாம் இருந்தார். இந்த ராக்கெட் வெற்றிகரமாக ‘ரோகிணி’ என்ற செயற்கைக்கோளை ஜூலை 1980-ல் பூமி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.
1980-களில், இந்திய அரசாங்கம் அப்துல் கலாமின் இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தை துவக்கியது. ஏவுகணைகளை ஒன்றன் பின் ஒன்றாக வடிவமைப்பதற்குப் பதிலாக ஒரே நேரத்தில் பல ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த திட்டத்திற்காக இந்திய அரசு ரூ.388 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தின் கீழ், ‘அக்னி’, ‘பிரித்வி’ உட்பட பல ஏவுகணைகளை உருவாக்குவதில் அப்துல் கலாம் முக்கிய பங்கு வகித்தார்.
1992 முதல் 1999 வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், டி.ஆர்.டி.ஓ. செயலாளராகவும் அப்துல் கலாம் இருந்தார். ‘பொக்ரான்’ அணு ஆயுத சோதனையில் அரசியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியில் முக்கிய பங்காற்றினார்.
2002-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அப்துல் கலாமை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைப்பதாக அறிவித்தது. தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அப்துல் கலாம், இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். கலாம் தனது பதவிக் காலத்தில், தன்னிடம் வந்த 21 கருணை மனுக்களில் ஒன்றை மட்டுமே நிராகரித்தார், மற்ற மனுக்களின் மீது முடிவெடுக்காமல் இருந்தார்.
அப்துல் கலாம் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களிடம் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். குழந்தைகளிடம் ‘கனவு காணுங்கள்’ என்று தொடர்ச்சியாக ஊக்கப்படுத்தி வந்தார். இந்தியாவை வல்லரசு நாடாக்க வேண்டும் என்ற கனவை இளைஞர்களிடம் விதைத்தார்.
2015-ம் ஆண்டு ஜூலை 27-ந்தேதி மேகாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த அப்துல் கலாம், பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்துல் கலாம் தனது இந்தியா 2020 புத்தகத்தில், 2020-ம் ஆண்டுக்குள் இந்தியாவை அறிவு வல்லரசாகவும், வளர்ந்த தேசமாகவும் மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை விளக்கியிருந்தார்.
இந்திய அரசின் உயரிய விருதுகளான ‘பத்ம பூஷன்’, ‘பத்ம விபூஷன்’, ‘பாரத ரத்னா’ ஆகியவற்றை அப்துல் கலாம் பெற்றுள்ளார். அப்துல் கலாமை கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்தநாளை உலக மாணவர் தினமாக ஐ.நா. அறிவித்தது. ‘ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படும் அப்துல் கலாமின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசால் இளைஞர் மறுமலர்ச்சி நாளாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.