தேர்தல் விந்தையும், பங்குச் சந்தையும்...!

பங்குச் சந்தை குறியீட்டு எண் என்பது, பங்குச் சந்தையின் போக்கை மட்டும் காட்டுவதல்ல. அது நாட்டில் நிலவும் பொருளாதார நிலையையும் காட்டும் ஒரு பாரோ மீட்டர் (மாணி) என்று சொல்லப்படுவதுண்டு. அந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.
தேர்தல் விந்தையும், பங்குச் சந்தையும்...!
Published on

நிச்சயமாக பொருளாதார நிலையின் அத்தனை அம்சங்களையும் பங்குச் சந்தை குறியீட்டு எண்களால் தனித்துப் பிரதிபலித்துவிட முடியாது. அதிகபட்சம், அவை முதலீட்டாளர்களின் மனநிலை மற்றும் அந்த நேரத்து நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அப்படித்தான் மே 20-ந் தேதி அன்று ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,422 புள்ளிகள் உயர்வு கண்டதை, முதன் முறையாக 40 ஆயிரத்தைத் தொட்டதை, சதவீத அடிப்படையில் 3.7 ஏற்றம் கண்டதை, ஒரே நாளில் முதலீடுகளின் சந்தை மதிப்பு 2.54 லட்சம் கோடி ரூபாய்கள் உயர்ந்ததை எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்பாகவும், பல்வேறு கட்ட வாக்குப் பதிவுகள் நடந்துகொண்டிருந்தபோதும் பங்குச் சந்தைகளில் இப்படிப்பட்ட உற்சாகம் இல்லை.

மத்தியில் ஆட்சி மாற்றம் வரலாம். அதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுக்கப்பட்டு வந்த கொள்கை முடிவுகள் மாற்றப்படலாம் என்கிற அச்சம் ஒரு புறம். எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது. அடுத்து கூட்டணி ஆட்சிதான். அதிலும் பிரதமர் பதவிக்கு பல கட்சிகளின் தலைவர்களும் போட்டிபோடுவதால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நிலையான மத்திய அரசு என்பது சாத்தியமில்லாமல் போய்விடுமோ என்ற பயம் மறு புறம்.

இப்படிப்பட்ட பயத்தால், தேர்தல் தேதி நெருங்க நெருங்க முதலீட்டாளர்கள், புதிய முதலீடுகள் செய்ய தயங்கினார்கள். தவிர, பலரும் அவர்கள் வசமிருந்த பங்குகளை தொடர்ந்து விற்றார்கள். தேர்தல் முடிவுகள் தெரிய வந்த பின்பு மீண்டும் உள்ளே வரலாம் என்று ரொக்கத்துடன் காத்திருக்க ஆரம்பித்தார்கள். இந்த காரணங்களால் தேர்தலுக்கு முன்பாக, ஒரு மாதத்தில் மட்டும் சந்தை குறியீட்டு எண்கள் 6 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ந்தன.

அதே தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி. முன்னிலும் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் மோடி பிரதமராகிறார் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தவுடனேயே, அடுத்த வர்த்தக நாளிலேயே விட்டதைப் பிடிக்க முயன்றார்கள். பெரும் பணத்துடன் உள்ளே குதித்தார்கள். பங்குகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன. விளைவு? சென்செக்ஸ், நிப்டி ஆகிய இரண்டு குறியீட்டு எண்களும் முறையே 40 ஆயிரம் மற்றும் 12 ஆயிரம் என்ற புதிய உச்சங்களைத் தொட்டன.

இப்போது தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளிவந்துவிட்டன. பெரும் பலத்துடன் அதே முந்தைய கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் ஆட்சி அமைக்கிறார்கள். இனி என்ன? பங்குகள் தொடர்ந்து விலை உயருமா? இனி தொடர்ந்து ஏற்றம் தானா?

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகளும், மத்தியில் நிலையான ஆட்சியும் முக்கியம்தான். ஆனால், அது மட்டுமே அதற்குப் போதாது.

பங்குச் சந்தைக்கு மட்டுமல்ல. தேசத்தின் பொருளாதார நலனுக்கும் கூட இன்னும் பல்வேறு விஷயங்கள் சரியாக நடக்கவேண்டும்.

அந்த விஷயங்களில் சில உள்நாட்டு விவகாரங்கள். வேறு சில, வெளிநாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள்.

உள்நாட்டு விவகாரங்களில் ஒன்று, யாருக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது என்பது. அடுத்து 2019-20-ம் ஆண்டுக்கான முழு பட்ஜெட். இனிதான், புதிய நிதியமைச்சர் தான் மீத ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். ஜூலை மாதம் போடப்படவிருக்கும் அந்த மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்? எந்தெந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்? வேலை வாய்ப்பை பெருக்க புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படுமா? இந்திய ஏற்றுமதி தொடர்ந்து சுணக்கமாகவே இருக்கிறதே! புதிய திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படுமா?

இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும்? நாடெங்கிலும் போதுமான அளவு பெய்யுமா? அதைப் பொறுத்தல்லவா கணிசமான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களைப் பொறுத்தும் அல்லவா நாட்டின் பொருளாதாரம், விலைவாசி மற்றும் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.

வேலை வாய்ப்பை பெருக்க, அரசு மற்றும் தனியார் முதலீடுகள் அதிகரிக்கவேண்டுமே. இப்போது இருக்கும் வட்டி விகிதங்கள், நாட்டின் பனவீக்கத்துடன் ஒப்பிடும்போது, கூடுதல் என்கிற கருத்து இருக்கிறதே. நாட்டில் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிட, ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களைக் குறைக்குமா? அதே காரணத்திற்காக அரசு ஏதேனும் ஸ்டிமுலஸ் எனப்படும் ஊக்க நடவடிக்கைகளில் ஈடுபடுமா?

இந்திய பொருளாதாரத்தின் மீது தாக்கம் தரவல்ல சில சர்வதேச நிகழ்வுகளில் முக்கியமானது, இந்தியாவின் பெரும் இறக்குமதிப் பொருளான கச்சா எண்ணெயின் விலை.

ஈரான் மீதான அமெரிக்காவின் வர்த்தகத் தடையால் உயர்ந்து விடக்கூடும் என்று அஞ்சப்பட்ட கச்சா எண்ணெய் விலை நல்ல வேளையாக உயரவில்லையே. இது, அதிக இறக்குமதி செய்துகொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு சாதகமாக இருக்கிறதே. இந்த நிலை தொடருமா?

ஈரானை மிரட்டுவதற்காக அமெரிக்கா இரண்டு போர் கப்பல்களை வளைகுடா பகுதிக்கு அனுப்பியிருக்கிறதே. அந்தக் கப்பல்களை ஏவுகணைகள் அல்லது ரகசிய ஆயுதங்கள் கொண்டு நாங்கள் கடலுக்குள் மூழ்கடிப்போம் என்று ஈரான் கூறுகிறதே. இந்த இருநாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவிடுமே. போர் மேகம் கலையுமா? அல்லது நெருங்கி வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் (2020) போர் சாத்தியத்தை அதிகப்படுத்துமா?

தங்கள் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மிக கூடுதலான வரி போட்ட அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்க இறக்குமதி மீதான தீர்வைகளை கடுமையாக சீனா உயர்த்தியிருக்கிறதே? தவிர, வர்த்தக போரின் ஓர் அங்கமாக, சீனா, அது அதிக அளவில் வாங்கி வைத்திருக்கும் அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களான டிரஷரி பில்களை விற்கலாம். விற்று, டாலராக பெற முயற்சிக்கலாம் என்று கருதப்படுகிறதே!

சீனா, அப்படி செய்தால் சர்வதேச சந்தைகளில் அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலைகளில் பெரும் ஏற்ற இறக்கங்கள் உண்டாகுமே. இல்லை இல்லை. சீனா அப்படி செய்யாது. காரணம், அப்படி விற்றுக்கிடைக்கும் பல பில்லியன் டாலர்களை லாபகரமாக முதலீடு செய்ய அதற்கு வேறு இடமில்லை என்கிறார்களே. சீனா விற்று சர்வதேச சந்தைகளில் சலனம் ஏற்படுத்துமா?

இந்த அமெரிக்க-சீன வர்த்தகப் போர் எப்போது முடிவுக்கு வரும்? இப்படிப்பட்ட நடவடிக்கைகளால், அந்த நாடுகளுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் இந்தியாவிற்கு ஏதும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுமா?

இப்படியாக தேசத்தின் பொருளாதார நலனுக்கும் அதன் மூலம் பங்கு சந்தைக்கும் தொடர்பான நிகழ்வுகள் பல வர இருக்கின்றன. தொடர்ந்து கவனிப்போம்.

- டாக்டர் சோம வள்ளியப்பன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com