மகிழ்வித்து மகிழ்வோம்...!

இன்று (மார்ச்20-ந் தேதி) சர்வதேச மகிழ்ச்சி தினம். ஓர் அரசர் பல போர்களில் வெற்றி பெற்று தனது பேரரசை நிறுவினார். அவரது அரசாங்கம் பெரியது, அவரது செல்வங்கள் அளவிடற்கரியது. ஆனாலும், அவரிடம் மகிழ்ச்சி இல்லை.
மகிழ்வித்து மகிழ்வோம்...!
Published on

கவலை ரேகைகள் அவரது முகத்தில் நிறைய இருந்தன. தனது அமைச்சர்களை அழைத்தார். மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி சொல்லுங்கள்,என்றார்.

அமைச்சரவை கூடி விவாதித்தது. பண்டிகைக் காலங்களிலும், சுபகாரிய நாட்களிலும், மக்கள் புது ஆடைகளை உடுத்துகிறார்கள். அப்போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். எனவே, உலகில் மகிழ்ச்சியாக வாழ்கிற மனிதர்களின் சட்டைகளை அணிந்து கொண்டால் மகிழ்ச்சி அடையலாம் என்ற தீர்மானத்தை மன்னரிடம் முன்மொழிந்தனர்.

அதன்படியே, மகிழ்ச்சியான மனிதர்களைத் தேடி நாடு முழுவதும் வீரர்கள் அனுப்பப்பட்டனர். பலதரப்பட்ட மக்களை சந்தித்தனர். ஒவ்வொருவரும் தங்களிடம் பணம் குறைவில்லாமல் இருந்தும் மனக்குறைகளோடு வாழ்வதாகவும் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை எனவும் உறுதியாகக் கூறினர். இதையறிந்ததும் நம் மண்ணில் மகிழ்ச்சியாய் வாழ்கின்ற எவரேனும் அரசவைக்கு வரவும் என அப்பேரரசின் முரசு கொட்டியது. அதன் பின்னர், ஒரு கிராமத்திலுள்ள ஏழ்மையான தொழிலாளி எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்ற செய்தி மன்னரின் காதுக்கு எட்டியது. அவர் அழைத்துவரப்பட்டார். எத்தனையோ கடும் சோதனைகளைக் கடந்தும் அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டது.

அமைச்சர்களிடம், உடனே அவரது சட்டையைக் கொண்டு வாருங்கள்என ஆணையிட்டார், மன்னர். அமைச்சர்களோ, மன்னா! அவர் வாழ்நாளில் சட்டையே அணிந்ததில்லையாம், என்றனர். மகிழ்ச்சிக்குப் பணமும் அவசியமில்லை, பட்டாடையும் அவசியமில்லை. மகிழ்ச்சியான மனது மட்டுமே அவசியம் என்ற உண்மை அன்று அந்த அரசவையில் அரங்கேறியது. மகிழ்ச்சி விலை மதிப்பில்லாதது. அதை விலையுர்ந்தப் பொருட்களாலும் விலைக்கு வாங்க முடியாது. அரண்மனைகள் மகிழ்ச்சியைத் தருவதில்லை அருமையான மனமே மகிழ்ச்சியைத் தருகிறது.

மகிழ்ச்சி என்பது பணத்தில் இல்லை. அது மனதில் உள்ளது. மகிழ்ச்சி பொருளிலும் இல்லை; உருவிலும் இல்லை; அது உணர்வில் இருக்கிறது. அவ்வுணர்வினை மனதில் ஏற்படுத்திக் கொள்பவர் மகிழ்ச்சியாக இருப்பர். அந்நிலையில் நம் கைநழுவிப் போகின்ற செயல்களுக்காக நாம் கவலைப்படவும் மாட்டோம். நாம் ஆசைப்பட்டது கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியாய் இருப்போம். வறியவர்க்குப் பணம் கிடைத்தால் மகழ்ச்சியாக இருக்கலாம் எனத் தோன்றும். ஆனால் பணம் வைத்திருப்பவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா? உடல் நலம் குன்றியவர் ஆரோக்கியமாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாமே என எண்ணுவர். ஆனால், அவர்கள் ஆரோக்கியமாக இருந்தபோது மகிழ்ச்சியாக இருந்தார்களா ? எனவே நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது மகிழ்ச்சிக்கு முக்கியமல்ல. எல்லா நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் மனிதத்தின் தத்துவம்.

மகிழ்ச்சியாகவே வாழ்கின்ற வானம் பாடிகளைப் போல், மனிதனும் ஒவ்வொருநாளும், ஒவ்வொரு செயல்பாட்டிலும் மகிழ்ந்திருப்பதுதான் மனிதத்தின் அழகு. அதற்கு மாறாக, வாழ்வின் பிரச்சினைகளை சுமையாக நினைப்பது தவறாகும். உடற்பயிற்சிக் கூடத்தில் வலிகளை சுகமாக அனுபவிப்பவர்களால் மட்டுமே கட்டுடலைப் பெற முடியும். வலிகளில்லாமல் பலன்கள் இருப்பதில்லை என்பதே உண்மை.

உழைப்பினைச் சுமையாக நினைப்பவர்கள் விரைவில் களைப்படைகிறார்கள். பின்னர் கவலைப்படுகிறார்கள். உழைப்பினைச் சுகமாக நினைப்பவர்கள் மகிழ்ச்சியாக வேலையைச் செய்கிறார்கள். மேலும், அவர்களது வேலையை கலையாகவே மாற்றுகிறார்கள். மகிழ்ச்சியானவர்களே தங்களது பணியில் முழுத் திறமையையும் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் அவர்களது உழைப்பு உன்னதமாகிறது. அத்தகைய உன்னதத்தைக் காண்பவர்களும் மகிழ்கின்றனர்.

மகிழ்ச்சியான மனிதர்கள் தாங்கள் மகிழ்வாய் இருப்பதுடன் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைக்கின்றனர். தனித்து மகிழ்ந்தால் அது இன்பம். அது சில நிமிடங்களிலிருந்து சில காலங்கள் வரை நீடிக்கும். மகிழ்ச்சி என்பது இன்பத்தின் பலபடியாக்கம். மகிழ்ச்சியின் முழுமையான பலனை அனுபவிக்க நீங்கள் யாராவது ஒருவருடன் அதைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் மார்க் டுவைன். சுவையறியாத தேனீக்களால் சுவை மிகுந்த தேனை உருவாக்க முடிவதில்லை. அதைப்போல மகிழ்ச்சியடையாத மனிதர்களால் பிறருக்கு எவ்வித மகிழ்ச்சியையும் தந்துவிட முடிவதில்லை. மனிதன் மகிழ்ச்சியாக இருப்பது முதல் நிலை. பிறரையும் மகிழ்ச்சிப் படுத்துவதே முடிவு நிலை.

மகிழ்ச்சியைத் தேடி ஓட வேண்டியதில்லை. அது உண்மையாக உழைப்பவனின் கரத்திலும், புதியவற்றை சிந்திப்பவனின் உள்ளத்திலும் நிறைந்திருக்கும்.

உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தற்போது வாழ்கின்ற வாழ்க்கையைவிட இன்னும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவிட முடியும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு மகிழ்ச்சியை தள்ளிப் போடுவார்கள் வாழ்வின் ரகசியத்தை அறியாதவர்கள். உங்களை நீங்களே மகிழ்ச்சிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் நினைப்பதைவிட காலம் உங்களுக்குக் குறைவாக உள்ளது என்ற சீன மொழியின் வரிகளை அவ்வப்போது அனைவரின் கண்களில் படுமாறு எழுதி வைத்துக் கொள்ளுதல் நலம்.

மகிழ்ச்சியாக வாழ்தல், மனிதம்! மகிழ்ச்சிப் படுத்துதல், புனிதம்!!

- முனைவர் இரா.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ், காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப்பிரிவு, சென்னை

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com